கேரளாவில் நிபா பாதிப்பு தொடர்பு பட்டியலில் 609 பேர் - சுகாதாரத்துறை தகவல்
- 38 பேர் அதிக ஆபத்துள்ள கண்காணிப்பிலும், 133 பேர் அதிக ஆபத்துள்ளவர்களாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
- மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நண்பர்கள், உறவினர்களை பார்ப்பதை குறைக்க வேண்டும்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் நிபா வைரஸ் தாக்கம் கடந்த சில மாதங்களாக அதிகமாக உள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக 2 பேர் இறந்துள்ளனர். இதனை தொடர்ந்து நோய் தடுப்பு நடவடிக்கையில் மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.
குறிப்பாக மலப்புரம், பாலக்காடு, கோழிக்கோடு மற்றும் எர்ணாகுளம் மாவட்டத்தில் தான் இந்த பாதிப்பு அதிகமாக உள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்ததில் 609 பேர் நிபா தொடர்பு பட்டியலில் இருப்பது தெரியவந்தது. இதில் 38 பேர் அதிக ஆபத்துள்ள கண்காணிப்பிலும், 133 பேர் அதிக ஆபத்துள்ளவர்களாகவும் வகைப்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மலப்புரத்தில் 207 பேரும், பாலக்காட்டில் 286 பேரும், கோழிக்கோட்டில் 114 பேரும், எர்ணாகுளத்தில் 2 பேரும் நிபா தொடர்பு பட்டியலில் அடங்குவார்கள். இந்த பகுதிகளில் சுகாதாரத் துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. காய்ச்சல் கண்காணிப்பை மேற்கொண்டு வரும் அவர்கள், தேவையற்ற மருத்துவமனை வருகைகளை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நண்பர்கள், உறவினர்களை பார்ப்பதை குறைக்க வேண்டும், சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவமனைகளுக்கு செல்பவர்கள், நோயாளிகள் அவர்களது உறவினர்கள் எல்லா நேரங்களிலும் முககவசம் அணியவேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.