இந்தியா

விவாகரத்து பெற 6 மாத காத்திருப்பு அவசியமற்றது: சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

Published On 2023-05-02 02:53 GMT   |   Update On 2023-05-02 02:53 GMT
  • அரசியல் சட்டத்தின் 142-வது பிரிவின்கீழ், சுப்ரீம் கோர்ட்டுக்கு சிறப்பு அதிகாரங்கள் உள்ளன.
  • திருமணங்களை உடனே ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட்டுக்கு உரிமை உள்ளது.

புதுடெல்லி :

பரஸ்பர விருப்பத்துடன் விவாகரத்து கோரும் கணவன்-மனைவி, 6 மாத காலம் கட்டாயம் காத்திருக்க வேண்டும் என்ற விதிமுறை நடைமுறையில் உள்ளது.

ஆனால், அரசியல் சட்டத்தின் 142-வது பிரிவின்கீழ், தனக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, உடனடியாக விவாகரத்து அளிக்க சுப்ரீம் கோர்ட்டு முன்வர வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரிக்க நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு அமைக்கப்பட்டது.

தம்பதிகளை குடும்பநல கோர்ட்டுகளுக்கு அனுப்பி, 6 மாத காலம் காத்திருக்க வைக்காமல், உடனடியாக விவாகரத்து வழங்க எந்த அடிப்படையில் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தலாம் என்று அரசியல் சட்ட அமர்வு ஆய்வு செய்தது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 29-ந் தேதி வழக்கு விசாரணை முடிவடைந்தது. தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அரசியல் சட்ட அமர்வு நேற்று இவ்வழக்கில் பரபரப்பு தீர்ப்பு அளித்தது.

தீர்ப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திருமண பந்தம், சீர்செய்ய முடியாத அளவுக்கு முறிந்துவிட்டது என்ற அடிப்படையில், அத்தகைய திருமணங்களை உடனே ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட்டுக்கு உரிமை உள்ளது. அதற்காக 6 மாத கட்டாய காத்திருப்பு காலத்தை கைவிட்டுவிட முடியும்.

எந்த வழக்கிலும் முழுமையான நீதி வழங்குவதற்காக, அரசியல் சட்டத்தின் 142-வது பிரிவின்கீழ், சுப்ரீம் கோர்ட்டுக்கு சிறப்பு அதிகாரங்கள் உள்ளன. அந்த அதிகாரங்களை இதற்கு நாங்கள் பயன்படுத்த முடியும்.

அந்த அதிகாரம் எங்களுக்கு இருப்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதன் மீது விவாதம் நடத்த தேவையில்லை. அந்த அதிகாரம், பொது கொள்கையின் அடிப்படை தத்துவங்களை மீறுவதாக ஆகாது.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News