இந்தியா

தேர்தல் ஆணையத்திடம் வழங்கியது என்னென்ன?- நீதிமன்றத்தில் எஸ்பிஐ பிரமாண பத்திரம் தாக்கல்

Published On 2024-03-13 13:27 IST   |   Update On 2024-03-13 13:27:00 IST
  • மொத்தம் 22,217 பத்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, 22,030 பத்திரங்கள் நன்கொடையாளர்களுக்கு பரிமாற்றம்.
  • பிரதம மந்திரியின் நிவாரண நிதிக்கும் பணம் வந்துள்ளது. அது வரவு வைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் திட்டம் செல்லாது என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. மேலும், தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் பத்திரம் தொடர்பான அனைத்து தகவல்களையும் வழங்கவும் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் எஸ்பிஐ காலஅவகாசம் கேட்டது. உச்சநீதிமன்றம் எஸ்பிஐ-க்கு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், உடனடியாக (மார்ச் 12-ந்தேதி) வழங்க வேண்டும் என நேற்று முன்தினம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

அதன்படி நேற்று தேர்தல் ஆணையத்திடம் தகவல்களை எஸ்பிஐ வங்கி கொடுத்துள்ளது. இந்த நிலையில் தேர்தல் ஆணையத்திடம் வழங்கியது என்னென்ன? என்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

அதில் "2019-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை 3,346 தேர்தல் பத்திரங்கள் கொள்முதல் செய்தோம். அதில் 1,609 பத்திரங்கள் நன்கொடையாளர்களுக்கு வழங்கப்பட்டது (பரிமாற்றம்).

2019 ஏப்ரல் 12-ந்தேதி முதல் 2024 பிப்ரவரி 15-ந்தேதி வரை மொத்தமாக 18871 தேர்தல் பத்திரங்கள் கொள்முதல் செய்தோம். 20421 தேர்தல் பத்திரங்கள் நன்கொடையாளர்களுக்க வழங்கப்பட்டது.

மொத்தம் 22,217 பத்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, 22,030 பத்திரங்கள் நன்கொடையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது (பணத்திற்குப் பதிலாக பரிமாற்றம்).

தேர்தல் ஆணையத்திடம் பென் டிரைவ் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இரண்டு பிடிஎஃப் (PDF Files) பக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட பாஸ்வேர்டும் வழங்கப்பட்டுள்ளது.

187 பத்திரங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டு அதன்மூலம் பெறப்பட்ட பணம் சட்ட விதிமுறைப்படி பிரதம மந்திரியின் தேசிய நிவாரண நிதி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது." இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News