இந்தியா
பாம்பு

திருப்பதி அலிபிரி நடைபாதையில் படையெடுக்கும் பாம்புகள்- பக்தர்களுக்கு எச்சரிக்கை

Update: 2022-05-22 11:26 GMT
தற்போது கோடைகாலம் என்பதால் வனப்பகுதியில் இருந்து பாம்புகள் அடிக்கடி அலிபிரி நடைபாதைக்கு வருகிறது.
திருப்பதி:

திருப்பதி அலிபிரி நடைபாதையில் கூர்க்கா கொட்டகை பகுதியில் நேற்று முன்தினம் 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஊர்ந்து வந்தது. பாம்பைப் பார்த்ததும் பாத யாத்திரையாக சென்ற பக்தர்கள்அலறியடித்து ஓடினர்.

இதுகுறித்து பாம்பு பிடிக்கும் தேவஸ்தான ஊழியர் பாஸ்கர் நாயுடுவுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நல்ல பாம்பை பிடித்து காட்டில் விட்டார். அப்போது நல்ல பாம்பு படமெடுத்து ஆடியதை பார்த்து பக்தர்கள் மெய்சிலிர்த்தனர்.

இதேபோல் திருப்பதியில் ரூயா மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சை மையம் அருகில் நேற்று காலை நல்ல பாம்பு ஒன்று வந்தது.

அந்த பாம்பு கருப்பு நிறத்தில் இருந்தது. பாம்பை பார்த்ததும் அங்கிருந்த நோயாளிகள் அலறியடித்து ஓடினர். இதுகுறித்து நோயாளிகள் மருத்துவமனை காவலாளிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

காவலாளி அலுவலக கண்காணிப்பாளர் சங்கராச்சாரி விரைந்து வந்து 10 அடி நீளமுள்ள பாம்பை பிடித்து சென்று சேஷாசல வனப்பகுதியில் விட்டார். நேற்று மாலை அலிபிரி நடைபாதை அருகே மீண்டும் 10 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று வந்து படமெடுத்து ஆடியது.

இதனைக் கண்ட பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து பாம்பு பிடிக்கும் பாஸ்கர் வந்து நல்ல பாம்பு பிடித்து வனப்பகுதியில் விட்டார்.

தற்போது கோடைகாலம் என்பதால் வனப்பகுதியில் இருந்து பாம்புகள் அடிக்கடி அலிபிரி நடைபாதைக்கு வருகிறது. பக்தர்கள் நடைபாதையில் கவனமுடன் செல்ல வேண்டும் நடைபாதையை விட்டு காட்டுக்குள் செல்ல கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News