இந்தியா
ராஜஸ்தான் சட்டசபையில் அமளி

பிரதமர் மோடியின் தொகுதியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதா? ராஜஸ்தான் சட்டசபையில் பாஜக வெளிநடப்பு

Published On 2022-03-09 17:18 GMT   |   Update On 2022-03-09 17:18 GMT
பாஜக உறுப்பினர்கள் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் என்றும், அவர்களால் விமர்சனங்களை பொறுத்துக்கொள்ள முடியாது என்று அமைச்சர் சாந்தி தாரிவால் பேசினார்.
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநில சட்டசபையில் இன்று காவல் மற்றும் சிறைத்துறைகளுக்கான மானியக்கோரிக்கை விவாதத்திற்கு பதிலளித்து, பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் சாந்தி தாரிவால் பேசினார். அப்போது, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் அரியானாவில் நடக்கும் நிகழ்வுகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுவதாக தெரிவித்தார். இந்த மூன்று மாநிலங்களிலும் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

‘பிரதமர் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் உத்தர பிரதேச பகுதியில் (வாரணாசி) பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. அங்கு புகார் கொடுத்தால் எப்ஐஆர் பதிவு செய்வதுகூட கடினம்’ என்றும் அமைச்சர் குற்றம்சாட்டினார். 

அமைச்சரின் இந்த கருத்திற்கு பாஜக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். பின்னர் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதுபற்றி சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ராஜேந்திர ரத்தோர் கூறுகையில், இது போன்ற பொருத்தமில்லாத கருத்துக்களைக் கேட்பதற்காக தங்கள் கட்சியின் எம்எல்ஏக்கள் அங்கு இருக்கவில்லை, என்றார்.

பாஜக உறுப்பினர்கள் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் என்றும், அவர்களால் விமர்சனங்களை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் தாரிவால் கூறினார். தேசிய குற்ற ஆவணக் காப்பகம் 2020ல் வெளியிட்ட அறிக்கையின்படி  பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உத்தரபிரதேசம் முதலிடத்தில் இருப்பதாகவும் அமைச்சர் தாரிவால் குற்றம் சாட்டினார்.
Tags:    

Similar News