இந்தியா
ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான்

நான் முதலமைச்சரானாலும் அது என் தலைக்கு ஏறாது- பகவந்த் மான்

Published On 2022-03-09 11:42 GMT   |   Update On 2022-03-09 11:42 GMT
பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்தால் பஞ்சாபை அதன் பழைய பெருமைக்கே மீட்டெடுப்பேன் என்று ஆம் ஆத்மி சார்பில் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 5 மாநில தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் 10-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற இருக்கிறது.

வாக்கு எண்ணிக்கை முடிவில் 5 மாநிலங்களிலும் ஆட்சியை தக்க வைக்கப்போவது யார் என்றும், புதிய ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்றும் தெரிந்துவிடும். இதனால், வாக்கு எண்ணிக்கையை தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

இதற்கிடையே, பல்வேறு செய்தி நிறுவனங்களும் கருத்துக் கணிப்பு நடத்தின. இதில், உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சியைத் தக்க வைக்கும் என்றும், பஞ்சாபில் காங்கிரசை வீழ்த்தி ஆம் ஆத்மி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்தால் பஞ்சாபை அதன் பழைய பெருமைக்கே மீட்டெடுப்பேன் என்று ஆம் ஆத்மி சார்பில் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.   
 
கருத்துக் கணிப்பு குறித்து பகவந்த் மான் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறப்பட்டுள்ளதாவது:-

என்னைப் பொறுத்தவரையில், சி எம் (முதல்- அமைச்சர்) என்றால் காமன் மேன் (சாமானியர்) என்று அர்த்தம். நான் முதலமைச்சரானாலும் அது என் தலைக்கு ஏறாது. உயர் பதவி கிடைத்தாலும் அதில் நீடிப்பேன்.

புகழ் எப்போதும் என் வாழ்வின் ஒரு பகுதியாகும். நான் மக்கள் மத்தியில் சென்று அவர்களுக்காக அவர்களுடன் இணைந்து பணியாற்றுவேன். அது எனக்கு ஒன்றும் புதிதல்ல.

எனது பஞ்சாப் என்பது பஞ்சாபின் கனவுகள். மக்கள் பழைய பஞ்சாபை திரும்ப விரும்புகிறார்கள். பஞ்சாபை அதன் பழைய பெருமைக்கு மீட்டெடுப்பேன். நாங்கள் பஞ்சாபை மீண்டும் பஞ்சாப்பாக ஆக்குவோம். அதை பாரிஸ், லண்டன் அல்லது கலிபோர்னியாவாக மாற்ற வேண்டிய அவசியமில்லை. அது பிற கட்சிகளின் கனவு. அவர்கள் தோற்றுப் போகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்.. கோகுல்ராஜ் கொலை வழக்கு: 5 பேர் விடுதலைக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்யவேண்டும்- திருமாவளவன் கோரிக்கை
Tags:    

Similar News