இந்தியா
கொலை

கையெழுத்து போடாததால் ஆத்திரம்: தந்தையை கொலை செய்த மகன்கள் கைது

Published On 2022-02-19 13:41 IST   |   Update On 2022-02-19 13:41:00 IST
பத்திரப் பதிவு செய்யும்போது மகன்கள் இருவரும் தனது பங்கை தராததால் கையெழுத்துப்போடாமல் மரிகலய்யா வீடு திரும்பியுள்ளார்.
கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா அருகே உள்ள கெரேமேகல கொப்பலு என்கிற கிராமத்தைச் சேர்ந்தவர் மரிகலய்யா (68). கால்டாக்சி ஓட்டுனரான இவருக்கு 8 ஏக்கரில் விவசாய நிலம் உள்ளது. ஓய்வுக்குப் பிறகு இதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு  மரிகலய்யா கிராமத்திலேயே தனது பொழுதை கழித்து வந்தார்.

மரிகலய்யாவிற்கு சசிகுமார் மற்றும் ராஜேஷ் என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், மரிகலய்யா தனது விளை நிலத்தின் ஒரு ஏக்கரை ரூ.30 லட்சத்திற்கு விற்று மூன்று பேரும் பங்கு பிரித்துக் கொள்வதாக தெரிவித்தார்.

இதற்கு சம்மதம் தெரிவித்த மகன்கள் மரிகலையாவின் பங்கை கொடுக்காமல் இருந்துள்ளனர். பணம் கொடுத்தால்தான் கையெழுத்துப்போடுவதாக மரிகலய்யா பிடிவாதமாக தெரிவித்துள்ளார். ஆனால் பத்திரப் பதிவு செய்யும்போது மகன்கள் இருவரும் தனது பங்கு தர மறுத்ததால் கையெழுத்துப்போடாமல் மரிகலய்யா வீடு திரும்பினார்.

மேலும், உயிர் பயத்தால் இருவர் மீதும் போலீஸ் நிலையத்தில் புகாரும் தெரிவித்திருந்தார்.

கையெழுத்துப் போடாததால் ஆத்திரமடைந்த மகன்கள் நேற்று இரவு வீடு புகுந்து மரிகலய்யாவை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியுள்ளனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, மரிகலய்யா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து தலைமறைவாக இருந்த மரிகலய்யாவின் மகன்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 10 லட்சம் ரூபாய் பணத்திற்காக தந்தையை கொலை சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்.. நாங்கள் பள்ளிகளை கட்டவில்லை தேசபக்தர்களை உருவாக்க தொழிற்சாலைகளை கட்டுகிறோம்- கெஜ்ரிவால்

Similar News