இந்தியா
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

ஜனாதிபதி உரையின் முக்கிய அம்சங்கள்

Published On 2022-01-31 14:58 IST   |   Update On 2022-02-01 08:41:00 IST
கொரோனா தொற்று இருந்தபோதிலும் விவசாயிகள் 2020-21-ம் ஆண்டில் 30 கோடி டன் உணவு தானியங்களையும், 33 கோடி தோட்டக்கலை பொருட்களையும் உற்பத்தி செய்துள்ளனர் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார்.
புதுடெல்லி:

பாராளுமன்றத்தின் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தினார்.

ஜனாதிபதி உரையின் முக்கிய அம்சங்கள்:

* ஒரு வருடத்துக்குள் 150 கோடி டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி சாதனை படைத்துள்ளோம். 70 சதவீதத்துக்கும் அதிகமான பயனாளிகளுக்கு தடுப்பூசி இரண்டு டோஸ் செலுத்தப்பட்டு உள்ளது.

* எதிர்காலத்தில் சுகாதார நெருக்கடிக்கு நாட்டை தயார் படுத்தும் விதமாக ரூ.64 ஆயிரம் கோடியிலான பிரதம மந்திரி ‘ஆயுஷ்மாட் பாரத்’ சுகாதார உள்கட்டமைப்பு திட்டம் அமைக்கப்படுகிறது.

* ‘ஹர்கர் ஜல்’ திட்டத்தின் கீழ் 6 கோடிக்கு அதிகமான கிராம குடும்பங்கள் குடிநீரை பெறுகின்றன.

* இந்தியாவின் விவசாய ஏற்றுமதி ரூ.3 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.

* கொரோனா தொற்று இருந்தபோதிலும் விவசாயிகள் 2020-21-ம் ஆண்டில் 30 கோடி டன் உணவு தானியங்களையும், 33 கோடி தோட்டக்கலை பொருட்களையும் உற்பத்தி செய்துள்ளனர்.

* 433 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையை அரசு கொள்முதல் செய்துள்ளது. இதன் மூலம் 50 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்.

* பிரதமரின் கிசான் திட்டம் மூலம் 11 கோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்கள் ரூ.1.80 லட்சம் கோடி பெற்றுள்ளனர். விவசாயத் துறையில் இது பெரிய மாற்றமாகும்.

* பாலின சமத்துவத்தை கொண்டுவர பெண்களின் திருமண வயதை 21 ஆக அரசு உயர்த்தி உள்ளது.

* 2016-ம் ஆண்டு முதல் 56 வெவ்வேறு துறைகளில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்கள் தொடங்கப்பட்டுள்ளன. இது 6 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளுக்கு வழி வகுத்தது.

* இந்த நிதியாண்டில் முதல் 7 மாதங்களில் இந்தியா 48 பில்லியன் அமெரிக்க டாலர்களை அந்நிய நேரடி முதலீட்டில் பெற்றது. இது நாட்டின் மீது முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்கு ஆதாரமாகும்.

* பாதுகாப்பு ஒப்பந்தங்களில் மேக் இன் இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆயுதப்படைகள் பயன்படுத்தும் 209 பொருட்கள் இறக்குமதி செய்யப்படாது.

* கதிசக்தி மாஸ்டர் பிளான் இந்தியாவில் பல மாதிரி போக்குவரத்தில் புதிய சகாப்தத்தை அறிமுகப்படுத்துகிறது.

* பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக 2070-ம் ஆண்டுக்குள் இந்தியா நிகர பூஜ்ஜிய உமிழ்வை இலக்காக கொண்டுள்ளது.

* 2014 மார்ச்சில் 90 ஆயிரமாக இருந்த தேசிய நெடுஞ்சாலைகள் தற்போது 1.40 லட்சம் கி.மீட்டருக்கு அதிகமான நெடுஞ்சாலையை பெற்றுள்ளது.

* 10 புதிய மெட்ரோ ரெயில் பாதைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 8 மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான பயணிகள் பயன் அடைவார்கள்.

* ரூ.4,500 கோடி முதலீட்டில் 7 மெகா ஒருங்கிணைந்த ஜவுளி பகுதிகள் மற்றும் ஆடை பூங்காக்கள் அரசால் அமைக்கப்படுகிறது.

* டெல்லி-மும்பையை இணைக்கும் இந்தியாவின் மிக நீளமான விரைவு சாலை விரைவில் முடிக்கப்படும். 21 கிரீன் பீல்டு விமான நிலையங்களுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

* கடந்த 7 ஆண்டுகளில் 24 ஆயிரம் கி.மீட்டர் ரெயில் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது.


Similar News