இந்தியா
உணவக ஊழியர்

பிரபல உணவக கழிவறையில் கேமரா வைத்து வீடியோ எடுத்த ஊழியர்- கண்டுபிடித்த திமுக பெண் நிர்வாகி

Published On 2022-01-29 21:10 IST   |   Update On 2022-01-29 21:10:00 IST
கழிவறையில் எக்ஸாஸ்டர் பேன் உள்ள பகுதியில் சிறிய அட்டை பெட்டி வைத்து வீடியோ எடுத்துள்ளார்.
சென்னை:

கிண்டியில் பிரபல உணவகம் ஒன்றில் கழிவறைக்கு செல்லும் பெண்களை ரகசியமாக வீடியோ எடுத்த வந்த ஊழியர் கைது செய்யப்பட்டார்.

சென்னையில் மதுரவாயல் பகுதி 152வது வார்டு தி.மு.க. மகளிரணி அமைப்பாளராக இருக்கும் பாரதி என்ற பெண்மணி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட சைதாப்பேட்டையில் நடந்த நேர்காணலில் பங்கேற்றார்.

அதன்பின் கிண்டியில் உள்ள பிரபல உணவகத்தில் சாப்பிட சென்ற அவர், கழிவறையை பயன்படுத்த சென்றபோது எக்ஸாஸ்டர் பேன் உள்ள பகுதியில் சிறிய அளவிலான அட்டை பெட்டியை இருப்பதை பார்த்து சந்தேகம் கொண்டார். 

இதையடுத்து அந்த பெட்டியை பரிசோதனை செய்ததில், மொபைல் போன் மறைத்து வைக்கப்பட்டு, அதன் வாயிலாக வீடியோ பதிவு செய்யப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த பாரதி கிண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் வந்து நடத்திய விசாரணையில் உணவகத்தில் சப்ளையராக வேலை பார்க்கும் விருதுநகரை சேர்ந்த கண்ணன் என்பவர் மொபைல் போனை மறைத்து வைத்து வீடியோ எடுத்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News