செய்திகள்
உமர் அப்துல்லா

எனது கடைசி மூச்சு இருக்கும்வரை போராடுவேன் -உமர் அப்துல்லா சூளுரை

Published On 2021-11-27 16:05 GMT   |   Update On 2021-11-27 16:05 GMT
என்கவுண்டரில் கொல்லப்பட்ட இளைஞரின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உமர் அப்துல்லா வலியுறுத்தினார்.
ஜம்மு:

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவருமான உமர் அப்துல்லா, ஜம்மு காஷ்மீரின் ராம்பன், தோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களை உள்ளடக்கிய செனாப் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 8 நாள் கொண்ட இந்த சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நாளான இன்று, ராம்பன் மாவட்டத்தில் என்கவுண்டரில் கொல்லப்பட்ட இளைஞரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் கூல் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது, ‘ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து மற்றும் மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதற்காக எனது கடைசி மூச்சு வரை போராடுவேன்’ என்று சூளுரைத்தார்.

‘நாங்கள் எங்களுக்காகவும் எங்கள் வீடுகளுக்காகவும் போராடவில்லை. ஜம்மு காஷ்மீர் மக்களாகிய உங்களுக்காகவும், உங்கள் நலன்களைப் பாதுகாப்பதற்காகம் போராடுகிறோம்.  2019, ஆகஸ்ட் 5 அன்று நம்மிடம் இருந்து பறிக்கப்பட்ட நமது உரிமைகளை மீட்டெடுப்பதற்காகவே நாம் போராகிறோம். இறுதி மூச்சு வரை போராடுவோம்’ என்றார் உமர் அப்துல்லா.

என்கவுண்டரில் கொல்லப்பட்ட இளைஞரின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்திய உமர் அப்துல்லா, இப்பகுதியில் இருந்து பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக போராடி பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்திற்கு இது மிகப்பெரிய அநீதி என்று கூறினார்.
Tags:    

Similar News