செய்திகள்
மாடுகளுக்கு ஆம்புலன்ஸ் சேவை

விரைவில் மாடுகளுக்கு ஆம்புலன்ஸ் சேவை: உ.பி அரசு அதிரடி திட்டம்

Published On 2021-11-15 06:51 GMT   |   Update On 2021-11-15 06:51 GMT
இந்த புதிய சேவையில், ஆம்புலன்ஸில் ஒரு கால்நடை மருத்துவர், இரண்டு உதவியாளர்கள் 15 முதல் 20 நிமிடங்களுக்குள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைவார்கள்.
மதுரா:

கடுமையான நோய்களால் பாதிக்கப்படும் மாடுகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாததால், உயிரிழக்கும் கொடூரம் நடைபெறுகிறது. இதனால், நோய்வாய்ப்பட்ட மாடுகளை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கும் வகையில், புதிய ஆம்புலன்ஸ் சேவையை உத்தரப் பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து பால்வள மேம்பாடு, கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் சவுத்ரி லட்சுமி நரேன் கூறியதாவது:-

மாடு நோய்வாய்ப்பட்டால், கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் மக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இதை தடுக்கும் வகையில், மாடுகளை விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வசதியாக, ஆம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த சேவையின் மூலம், மாடுகளின் உயிர் காக்கப்படும்.

அடுத்த மாதம் தொடங்க உள்ள இத்திட்டத்தின் கீழ், 112 அவசர சேவை எண் வழங்கப்படுகிறது. மேலும், புகார்களை தெரிவிக்க லக்னோவில் கால் சென்டர் அமைக்கப்படும். அவசர எண்ணை அழைத்ததும், ஆம்புலன்ஸில் ஒரு கால்நடை மருத்துவர், இரண்டு உதவியாளர்கள் 15 முதல் 20 நிமிடங்களுக்குள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைவார்கள்.

இத்திட்டத்தை மதுரா உள்பட எட்டு மாவட்டகளில் சோதனை ஓட்டமாக நடத்தப்படுகிறது. இந்த சேவைக்காக , 515 ஆம்புலன்ஸ்கள் தயாராக உள்ளன.

இதைத்தவிர, இலவச உயர்தர விந்து மற்றும் கரு மாற்று தொழில்நுட்பம் வழங்குவதன் மூலம் மாநிலத்தின் இன மேம்பாட்டுத் திட்டத்திற்கு ஊக்கம் அளிக்கும். இது மலட்டு மாடுகளை கூட அதிக பால்  தரும் உயிரினமாக  மாற்றும். அதனால், கரு மாற்று தொழில்நுட்பம் மாநிலத்தில் ஒரு புரட்சியான திட்டமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News