'ராஜா ராணி'க்கு பின் இணையும் ஆர்யா - ஜிவி கூட்டணி!
- அட்டக்கத்தி தினேஷ் நாயகனாக நடிக்க, ஆர்யா வில்லனாக நடிக்கிறார்.
- இன்று 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் ஆர்யா
ஆர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கவுள்ள 40வது படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது.
தங்கலான் படத்தை தொடர்ந்து நடிகர் ஆர்யாவை வைத்து சர்பட்டா-2 படத்தை ரஞ்சித் இயக்குவார் என எதிர்பார்த்திருந்த நிலையில், வேட்டுவம் படப்பிடிப்பை தொடங்கினார். இப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ் நாயகனாக நடிக்க, ஆர்யா வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நடிகர் ஆர்யாவின் 40வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்யாவின் பிறந்தநாளான இன்று அவர் நடிக்கவுள்ள 40வது படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. நிகில் முரளி தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதனை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ள ஜிவி பிரகாஷ், ராஜா ராணிக்கு பிறகு ஆர்யாவிற்கு ஓர் காதல் படத்திற்கு இசையமைக்கிறேன் என தெரிவித்துள்ளார். இதன்மூலம் காதல்கதையை மையமாக கொண்ட படம் என தெரிகிறது.
படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.