செய்திகள்
மேனகா காந்தி

சமையல் கியாஸ் சிலிண்டர் விலையையும் குறையுங்கள் - மத்திய அரசுக்கு மேனகா காந்தி வலியுறுத்தல்

Published On 2021-11-07 02:30 GMT   |   Update On 2021-11-07 02:46 GMT
பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது போன்று சமையல் கியாஸ் சிலிண்டர் உள்ளிட்ட பிறவற்றின் விலையை குறைக்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என மேனகா காந்தி வலியுறுத்தி உள்ளார்.
சுல்தான்பூர்:

மத்திய அரசு, தீபாவளி பரிசாக பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை முறையே ரூ.5, ரூ.10 என்ற அளவுக்கு குறைத்தது. இதே போல பல மாநிலங்களும் அவற்றுக்கான மதிப்பு கூட்டு வரியை குறைத்துள்ளன.

இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை குறைந்து சாமானிய மக்களுக்கு, வாகன ஓட்டிகளுக்கு சற்றே நிம்மதியை தந்துள்ளது.

அதே நேரத்தில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில் பா.ஜ.க. முன்னாள் மத்திய மந்திரியும், சுல்தான்பூர் தொகுதி எம்.பி.யுமான மேனகா காந்தி தனது தொகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது. இதே போன்று சமையல் கியாஸ் சிலிண்டர் உள்ளிட்ட பிறவற்றின் விலையை குறைக்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். இதுவும் மக்களுக்கு நிவாரணம் அளிக்கும்.



இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே காங்கிரஸ் கட்சி, கடந்த ஆண்டு பெட்ரோல், டீசல் மீதான வரியை முறையே ரூ.13, ரூ.16 உயர்த்தியது. இதை மத்திய அரசு முழுமையாக திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

மேலும், காரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின்கீழ் மிகவும் ஏழையாக உள்ள மக்களுக்கு வழங்குகிற உணவு தானியங்களை அடுத்த ஆண்டு மார்ச் வரை தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி துணை முதல்-மந்திரியுமான மணிஷ் சிசோடியா, பெட்ரோல், டீசல் மீதான வரியை மேலும் தலா ரூ.15 அளவுக்கு குறைக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்.

Tags:    

Similar News