செய்திகள்
கேரள மாநில நிதி மந்திரி பாலகோபால்

பெட்ரோல், டீசலுக்கான மாநில வரியை குறைக்க மாட்டோம் - கேரள நிதி மந்திரி திட்டவட்டம்

Published On 2021-11-06 09:29 GMT   |   Update On 2021-11-06 09:29 GMT
பெட்ரோலின் விலையை குறைக்க வேண்டும் என்றால் மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் கேரள நிதி மந்திரி பாலகோபால் கூறியுள்ளார்.

திருவனந்தபுரம்:

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு தீபாவளி பண்டிகையையொட்டி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை முறையே 5 மற்றும் 10 ரூபாயை வரி குறைப்பு மூலம் குறைத்தது.

இந்த நிலையில் கேரளாவில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதாவினர் பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரியை குறைக்க வேண்டும். என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது.

இதற்கிடையே கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மாநில நிதி மந்திரி பாலகோபால் கூறியதாவது:-

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணமாகும். இதில் அதிக அளவில் மத்திய அரசே வரி விதிக்கிறது. மாநில அரசுகளுக்கு பெரிய பங்கு இல்லை. எனவே கேரள அரசு மேலும் வரியை குறைக்க முடியாது. இது தொடர்பான எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்க முடியாது.

கேரளாவில் விற்கப்படும் ஒரு லிட்டர் பெட்ரோலில் 31.8 ரூபாய் வரி மூலம் மத்திய அரசு பெறுகிறது. இது போல் டீசல் மூலம் 32.9 ரூபாய் மத்திய அரசுக்கு கிடைக்கிறது. மாநில அரசுக்கு டீசல் வரி மூலம் 30.8 சதவீதமும், பெட்ரோலில் 20.76 சதவீதமும் கிடைக்கிறது.

எனவே பெட்ரோலின் விலையை குறைக்க வேண்டும் என்றால் மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரள அரசு வரியை குறைக்க முடியாது. இது தொடர்பாக நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News