செய்திகள்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

ஆயுதங்கள் இன்றி இந்திய வீரர்களை பேச்சுவார்த்தைக்கு அனுப்பியது யார்? - ராகுல் கேள்வி

Published On 2020-06-18 08:18 GMT   |   Update On 2020-06-18 08:18 GMT
சீனாவுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு ஆயுதங்கள் இன்றி இந்திய வீரர்களை அனுப்பியது யார்? என ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார்.
புதுடெல்லி:

இந்தியா-சீன எல்லையில் திங்கட்கிழமை இரவு இரு தரப்பு படைகளுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இரு நாட்டு படைகளையும் விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையின்போது மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் சிலர் பலத்த காயமடைந்துள்ளனர். இந்த மோதலில் துப்பாக்கியை வீரர்கள் பயன்படுத்தவில்லை. கற்களை வீசியும், கையில் கிடைத்தவற்றை எடுத்து தாக்கியும் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இரு தரப்பிலும் சிலர் தண்ணீருக்குள் விழுந்ததாகவும், மறுநாள் உடல்களை மீட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சம்பவத்தால் எல்லையில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. பதற்றத்தை தணிக்க இரு தரப்பு அதிகாரிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவிற்கு எதிராக ஆத்திரமூட்டும் நடவடிக்கையில் சீனா தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், இந்தியா தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

எல்லை மோதல் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார். சீனாவுக்கு தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ராகுல் காந்தி இன்று வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், இந்திய வீரர்களை கொன்று மிகப்பெரிய குற்றத்தை சீனா செய்துள்ளது என்று கூறியுள்ளார். மேலும், ஆயுதங்கள் இன்றி நிராயுதபாணியாக இந்திய வீரர்களை பேச்சுவார்த்தைக்கு அனுப்பியது யார்? இந்த நிலைமைக்கு யார் பொறுப்பு? என்றும் ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார்.
Tags:    

Similar News