செய்திகள்
குமாரசாமி

இது போரில் ஈடுபட வேண்டிய நேரம் அல்ல: குமாரசாமி

Published On 2020-06-18 03:53 GMT   |   Update On 2020-06-18 03:54 GMT
சீனாவுடன் எழுந்துள்ள எல்லை பிரச்சினையில் இது போரில் ஈடுபட வேண்டிய நேரம் அல்ல என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கூறியுள்ளார்.
பெங்களூரு :

பெங்களூரு புறநகர் மாவட்டம் தேவனஹள்ளி அருகே காரஹள்ளியில் கிராம பஞ்சாயத்து புதிய கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டு, அந்த கட்டிடத்தை திறந்து வைத்து பேசும்போது கூறியதாவது:-

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதாக மாநில அரசு அறிவித்தது. ஆனால் இதுவரை விவசாயிகளுக்கு ரூ.56 லட்சம் மட்டுமே அரசு வழங்கியுள்ளது. அதேபோல் ஆட்டோ மற்றும் வாடகை கார் டிரைவர்களுக்கு தலா ரூ.5,000 வழங்குவதாக கூறினார்கள். இதுவரை ரூ.20 கோடி மட்டுமே அரசு வழங்கியுள்ளது.

நெசவாளர்களின் கடனை தள்ளுபடி செய்ய நான் முதல்-மந்திரியாக இருந்தபோது முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் சில தொழில்நுட்ப காரணங்களால் அதை செயல்படுத்த முடியவில்லை. இந்த அரசு வெறும் அறிவுப்புகளை மட்டுமே அறிவிக்கிறது. மாநிலத்தில் 50 லட்சம் பேருக்கு தலா ரூ.5,000 வழங்குமாறு கூறினேன். அவ்வாறு நிதி உதவி செய்தால் ரூ.2,500 கோடி மட்டுமே அரசுக்கு செலவாகும்.

குடகில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை கட்டி கொடுக்க எனது ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது. இப்போது அந்த வீடுகளை இந்த அரசு திறந்து வைத்துள்ளது. வேலை செய்தது நான், அதன் பெயரை இந்த அரசு பெற்றுள்ளது. மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை.

சீனா தாக்குதலில் நமது ராணுவ வீரர்கள் 20 பேர் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். தேவேகவுடா பிரதமராக இருந்தபோது, சீனா-இந்தியா இடையே 35 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த பிரச்சினை தீர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சீனா பிரதமர் இந்தியாவுக்கு வந்து, பேச்சுவார்த்தை நடத்தினார். நாட்டில் அமைதியை ஏற்படுத்தினார்.

தமிழ்நாட்டை சேர்ந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் சீனாவுடனான எல்லை பிரச்சினையை தீர்க்க தேவேகவுடா என்ன முயற்சி மேற்கொண்டார் என்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு தற்போது கொரோனா நெருக்கடியில் சிக்கியுள்ளது. மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். பொருளாதாரம் சீரழிந்துவிட்டது. இந்த சூழ்நிலையில் அண்டை நாடுகளுடன் பரஸ்பர நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். இது போரில் ஈடுபட வேண்டிய நேரம் அல்ல.

மக்கள் உணவுக்கே கஷ்டப்படுகிறார்கள். இந்த சூழ்நிலையில் போர் நடந்தால், மக்களின் நிலை என்ன ஆகும். நாட்டுக்கு ஆபத்து வருகிறபோது, நாம் போராட வேண்டும். ஆனால் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். ஆட்சி அதிகாரம் யாருக்கும் நிரந்தரம் இல்லை. நாடு போற்றும் வகையில் ஊடகங்கள் பணியாற்ற வேண்டும்.

யாரோ ஒருவரை திருப்திப்படுத்த பணியாற்ற வேண்டாம். இதுபற்றி ஊடகங்கள் சிந்திக்க வேண்டும். இந்துத்துவம் பற்றி சிந்திப்பவர்கள், இந்துக்களை பாதுகாப்பவர்கள் நாங்களே என்று சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்த வலையில் இளைஞர்கள் விழ வேண்டாம். ஊடகங்களை திசை திருப்புகிறார்கள்.

விவசாயிகள் கடனே வாங்காமல் பொருளாதார பலத்துடன் வாழ நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க செய்ய வேண்டும். நான் முதல்-மந்திரியாக இருந்தபோது, நான் இதற்கான முயற்சியில் ஈடுபட்டேன். ஆனால் குறைந்த காலம் பதவியில் இருந்ததால், அதை செய்ய முடியவில்லை. 5 ஆண்டுகள் ஆட்சி நடத்த எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. என் மீது நம்பிக்கை வையுங்கள். நான் எப்போதும் நம்பிக்கை துரோகம் செய்பவன் அல்ல. வரும் காலத்தில் மக்கள் யோசிக்க வேண்டும்.

நான் என்ன தவறு செய்தேன். எனக்கு எதற்காக தண்டனை கொடுத்தீர்கள். இன்றும் எனது வீட்டின் முன்பு பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் வந்து உதவி கேட்கிறார்கள். ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பது எனது எண்ணம். என்னிடம் பணம் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் எனது கஷ்டம் எனக்கு தான் தெரியும்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.
Tags:    

Similar News