செய்திகள்
பொதுமக்களுக்கு பரிசோதனை செய்யும் சுகாதார ஊழியர்

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 5000-ஐ தாண்டியது: மும்பை, புனேயில் ஊரடங்கு தளர்வு வாபஸ்

Published On 2020-04-22 09:15 IST   |   Update On 2020-04-22 09:15:00 IST
மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
மும்பை:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,984 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 640 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 5218 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 251 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையே கொரோனா ஹாட்ஸ்பாட் பகுதிகளான புனே மற்றும் மும்பை பிராந்தியங்களில் ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டதை அரசு திரும்ப பெற்றுள்ளது. மேலும், நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்களை வீடு வீடாக வழங்குவதை தடை செய்வது தொடர்பான வழிகாட்டுதல்களையும் திருத்தியது. 

கொரோனா வைரஸ் பரவுவதைக் கருத்தில் கொண்டு மும்பை பெருநகரப் பகுதி மற்றும் புனே நகரில் மட்டும் நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்களை வீட்டு வாசலில் வழங்குவதற்கான கட்டுப்பாடு அமலில் இருக்கும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 20 ம் தேதி ஏராளமான மக்கள் பயணம் செய்ததைக் கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வு திரும்பப் பெறப்பட்டிருப்பதாக அரசு கூறி உள்ளது.

உற்பத்திப் பிரிவுகள், தொழிற்சாலைகள், ஜவுளி நிறுவனங்கள் உட்பட 1,300 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீண்டும் செயல்படுவதற்கு மாநில தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் அனுமதி சான்றிதழ் வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Similar News