செய்திகள்
கேரள ஐகோர்ட்

நடிகை பலாத்காரம்- இன்று முதல் விசாரணையை தொடங்க கேரள ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2020-01-30 15:36 IST   |   Update On 2020-01-30 15:36:00 IST
ஓடும் காரில் நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை இன்று முதல் தொடங்க கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
திருவனந்தபுரம்:

கேரளாவில் ஓடும் காரில் நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும் அவரை பலாத்காரம் செய்த காட்சியை அந்த கும்பல் செல்போனில் படம் பிடித்தது. கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் மூளையாக செயல்பட்டதாக நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்து உள்ளார்.

மேலும் ரவுடி பல்சர் சுனில் உள்பட 12 பேரும் கைதானார்கள். இந்த வழக்கில் நடிகர் திலீப் 8-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று திலீப் கேரள ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை 6 மாத காலத்திற்குள் முடிக்க வேண்டும்என்று உத்தர விட்டனர். 

மேலும் கேரள ஐகோர்ட்டில் இந்த வழக்கு தொடர்பாக நேற்று விசாரணை நடந்தது. அப்போது நடிகை பலாத்கார வழக்கை விசாரிக்கும் கோர்ட்டு இன்று முதல் வழக்கு விசாரணையை தொடங்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அதை தொடர்ந்து நடிகை கடத்தல் வழக்கு விசாரணை இன்று முதல் தொடங்குகிறது. இன்று வழக்கின் முதல் சாட்சி கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளிக்கிறார். இதன் மூலம் இந்த வழக்கின் விசாரணை மீண்டும் சூடு பிடித்துள்ளது.

Similar News