செய்திகள்
டெல்லியில் இனி இலவச இண்டர்நெட்- 11 ஆயிரம் ஹாட்ஸ்பாட்டுகள் நிறுவ திட்டம்
டெல்லி முழுவதும் இலவச இண்டர்நெட் பயன்படுத்தும் விதமாக 11 ஆயிரம் ‘வைபை’ ஹாட்ஸ்பாட்டுகள் நிறுவப்படும் என டெல்லியின் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
புதுடெல்லி:
டெல்லியில் 2015 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. 70 சட்டமன்ற தொகுதிகளில் 67 தொகுதியை கைப்பற்றியது. அக்கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல் மந்திரியாக பதவியேற்றார். முதல்வரான பிறகு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தி வந்தார்.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கையின் ஒரு வாக்குறுதியான, டெல்லி மக்களுக்கு இலவச வைபை என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
‘டெல்லி முழுவதும் 11 ஆயிரம் இலவச ‘வைபை’ ஹாட்ஸ்பாட்டுகள் நிறுவப்படும். இதன்மூலம் மக்கள் இலவசமாக இண்டர்நெட்டை பயன்படுத்தலாம். முதல் கட்டமாக வரும் 16ம் தேதி 100 இடங்களில் தொடங்கப்படும். 7,000 ஹாட்ஸ்பாட்டுகள் சந்தை போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களிலும், 4,000 ஹாட்ஸ்பாட்டுகள் பேருந்து நிலையங்களிலும் நிறுவப்படும்’ என கெஜ்ரிவால் தெரிவித்தார்.