செய்திகள்

பானி புயலில் வீடு பறிபோனதால் கழிப்பறைக்குள் குடும்பம் நடத்தும் தலித் கூலி தொழிலாளி

Published On 2019-05-18 11:24 GMT   |   Update On 2019-05-18 11:24 GMT
ஒடிசா மாநிலத்தில் கோரத்தாண்டவமாடிய பானி புயலுக்கு வீட்டை பறிகொடுத்த தலித் தொழிலாளி தனது மனைவி மற்றும் இரு மகள்களுடன் கழிப்பறைக்குள் குடும்பம் நடத்தும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலத்தின் பல மாவட்டங்களை கடந்த 3-ம் தேதி துவம்சம் செய்த பானி புயலால் பெரும் பாதிப்புக்குள்ளான கேன்டிரப்பாரா மாவட்டத்தில் புயலின் தாக்கத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஆயிரக்கணக்கான குடிசை வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி, கரைந்து சாய்ந்து, தரைமட்டமாகின.

இப்படி வீடு, வாசல்களை இழந்து நிற்கதியாக நிற்பவர்களில் ரகுதெய்ப்பூர் கிராமத்தை சேர்ந்த தினக்கூலி தொழிலாளியான கிரோட் ஜேனா(58) என்பவரும் ஒருவர். வசித்துவந்த வீடு மண்மேடாகிப்போன நிலையில் பிரதமரின் தூய்மை பாரதம் திட்டத்தின்கீழ் கட்டித்தரப்பட்ட கழிப்பறையில் சுமார் 15 நாட்களாக இவர் வாழ்ந்து வருகிறார்.

6 அடி அகலம் 7 அடி நீளம் கொண்ட இந்த கழிப்பறையை தனது வசிப்பிடமாக மாற்றி தனது மனைவி மற்றும் பருவமடைந்த இருமகள்களுடன் குடும்பம் நடத்திவரும் இவர் கழிப்பிடமே வசிப்பிடமாக மாறிப்போனதால் அருகாமையில் உள்ள திறந்தவெளிகளை கழிப்படத் தேவைக்காக நாங்கள் தற்போது பயன்படுத்தி வருகிறோம்.

’எனக்கு வேறு வசதி இல்லாததால் அரசு தரும் நிவாரணத்தொகையை வைத்துதான் வேறு வீடு கட்ட வேண்டியுள்ளது. இதற்கு முன்னர் பிரதமரின் வீட்டுவசதி திட்டம் மற்றும் முதல் மந்திரி பிஜு பட்நாயக் பெயரிலான வீட்டுவசதி திட்டத்தின்கீழ் கல்வீடு கட்டுவதற்கு நான் விண்ணப்பித்திருந்தேன். ஆனால், எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டது.

அப்படி இந்த திட்டங்களின் மூலம் எனக்கு நிலையான வீடு அமைந்திருக்குமானால் என் வீட்டை இழந்து இப்படி கழிப்பறைக்குள் சமைத்து சாப்பிடும் துர்பாக்கியம் நேர்ந்திருக்காது. இன்னும் எத்தனை நாட்களுக்கு இங்கு வாழ வேண்டி இருக்குமோ?’ என்று வேதனையுடன் கூறுகிறார், கிரோட் ஜேனா.

கிரோட் ஜேனாவின் நிலைமை பற்றி தெரியவந்ததும் அவருக்கு ஏதாவது ஒரு திட்டத்தின்கீழ் வீடு கட்டித்தர தேவையான ஏற்பாடுகள் விரைவாக செய்யப்பட்டு வருவதாக கேன்டிரப்பாரா மாவட்ட கிராமப்புற மேம்பாட்டுத்துறை திட்ட இயக்குனர் திலிப் குமார் பாரிடா தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News