செய்திகள்

மோடி பலவீனமான பிரதமர்- பிரியங்கா கடும் தாக்கு

Published On 2019-05-10 17:37 IST   |   Update On 2019-05-10 17:37:00 IST
மோடி பலவீனமான பிரதமர் என்று உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி பேசியுள்ளார். #priyankagandhi #pmmodi

லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கரில் காங்கிரஸ் தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கலந்து கொண்டு பேசியதாவது:-

பிரதமர் மோடி 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன். விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவேன் என்று கூறி ஆட்சியை பிடித்தார். அவர் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது குறித்து மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால் அவர் தேர்தலுக்கு தொடர்பு இல்லாத வி‌ஷயங்களை பேசி மக்களை திசை திருப்ப முயற்சி செய்கிறார்.

தன்னை முன்னிறுத்திக் கொள்வதற்கும், தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் பேசுவதற்கும் அவருக்கு மக்கள் அரசியல் ரீதியாக அதிகாரம் வழங்கவில்லை. மக்களுக்கு நன்மைகள் செய்வதற்கு தான் அதிகாரம் வழங்கினார்கள்.

மக்களின் பிரச்சினைகளை தெரிந்துகொள்ளவும், அவர்களின் கோரிக்கைகளை புரிந்துகொள்ளவும் பிரதமருக்கு நேரமில்லை. கேள்விகளை முன்னெடுத்தாலும் அதற்கு அவர் பதில் அளிப்பதே இல்லை.

பிரதமர் மோடி தனது பிரசாரத்தில் உண்மைகளை மறைத்து மக்களை ஏமாற்றி வருகிறார். பெரிய தொழில் அதிபர்களின் வங்கி கடன்களை அவர் தள்ளுபடி செய்தார். ஏழை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யுங்கள் என்று ராகுல் காந்தி கோரிக்கை விடுத்த போது அரசிடம் நிதி இல்லை என்று கூறி புறக்கணித்தார்.


மோடி தன்னை பலம் மிக்கவராக முன்னிறுத்தி பிரசாரம் செய்து வருகிறார். மக்களின் பிரச்சினைகளை ஏன் தன்னால் தீர்க்க முடிய வில்லை என்று விளக்கம் அளிக்கும் துணிவு அவருக்கு இல்லை. இவரைப் போன்ற கோழைத்தனமான, பலவீனமான பிரதமரை என் வாழ் நாளில் நான் பார்த்தது இல்லை.

பிரசார மேடைகளில் பாகிஸ்தான் குறித்து அவரால் பேச முடிகிறது. ஆனால் தனது ஆட்சியில் மக்களுக்கு என்ன செய்தோம் என்பதை அவரால் பேச முடியவில்லை.

டெல்லியில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கூடி 5 நிமிடங்கள் மட்டும் சந்திக்க அனுமதி கேட்டு பிரதமரிடம் கோரிக்கை வைத்தனர்.

ஆனால் விவசாயிகளிடம் பேச அவரது மனம் விரும்ப வில்லை. இப்போது எந்த முகத்தை வைத்துக்கொண்டு விவசாயிகளிடம் ஓட்டு கேட்கிறார்.

இவ்வாறு பிரியங்கா பேசினார். #priyankagandhi #pmmodi

Tags:    

Similar News