செய்திகள்

பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு இல்லை - சிவசேனா தலைவர் சொல்கிறார்

Published On 2019-05-08 05:09 GMT   |   Update On 2019-05-08 05:09 GMT
பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு இல்லை என்று சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார். #shivsena #BJP

மும்பை:

பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி தனிப் பெரும்பான்மை பலம் பெறும் என்று அமித் ஷாவும், அருண்ஜெட்லியும் கூறி வருகிறார்கள்.

பிரதமர் மோடியோ, இந்த தடவை பாரதிய ஜனதா கட்சி 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்.

இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் ராம் மாதவ் சமீபத்தில் பேட்டி அளித்தபோது, “பாரதிய ஜனதா கட்சிக்கு இந்த தடவை தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்க வாய்ப்பு இல்லை” என்று கூறி இருந்தார். அவரது இந்த பேச்சு பா.ஜனதா மூத்த தலைவர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது.

இந்த நிலையில் பா.ஜனதா கூட்டணியில் முக்கிய இடம்பிடித்துள்ள சிவசேனா கட்சியும் பாரதிய ஜனதாவுக்கு எதிரான கருத்துக்களை கூற தொடங்கியுள்ளது. சிவசேனா தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத்தும் பா.ஜனதாவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காது என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி விவரம் வருமாறு:-


2014-ம் ஆண்டு தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 282 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் இந்த தடவை அதில் 40 இடங்கள் வரை குறையலாம். எனவே பாரதிய ஜனதா கட்சிக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காது.

இத்தகைய நிலையில் மத்தியில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க கூட்டணி கட்சிகளின் தயவும் ஆதரவும் நிச்சயம் தேவைப்படும். இந்த வி‌ஷயத்தில் பா.ஜனதா பொதுச்செயலாளர் ராம் மாதவ் கூறிய கருத்துக்கள் முழுக்க, முழுக்க சரியானது. அடுத்து தேசிய ஜனநாயக கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

பாரதிய ஜனதா கட்சி தனி மெஜாரிட்டி பெறாவிட்டாலும் கூட்டணி கட்சிகள் பலத்துடன் ஆட்சி அமைக்கும். அந்த வகையில் பிரதமர் மோடி மீண்டும் பிரதமரானால் சிவசேனா கட்சி மிகவும் மகிழ்ச்சி அடையும்.

ராம் மாதவ் கருத்துப்படி பா.ஜனதா கூட்டணி அரசு மீண்டும் ஆட்சி செய்யும். அந்த கூட்டணியில் சிவசேனா முக்கிய அங்கம் வகிக்கும்.

இவ்வாறு சஞ்சய் ராவத் கூறினார். #shivsena #BJP

Tags:    

Similar News