செய்திகள்

பாஜக தனி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் - அமித் ஷா நம்பிக்கை

Published On 2019-04-24 03:58 GMT   |   Update On 2019-04-24 03:58 GMT
வாரணாசியில் உள்ள மெகமூர்கஞ்ச் பகுதியில் பாஜக ஊடக மையத்தை திறந்து வைத்த பின்னர் பேசிய பாஜக தேசிய தலைவரான அமித் ஷா, பாஜக தனி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் என கூறியுள்ளார். #AmitSha #BJP
வாரணாசி:

குஜராத் மாநிலத்தில் நேற்று ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இம்மாநிலத்தின் அகமதாபாத் பகுதியில் தனது குடும்பத்தினருடன் பாஜக தேசிய தலைவரான அமித் ஷா வாக்களித்தார்.

அதன் பின்னர் பிரதமர் மோடி போட்டியிடும்  வாரணாசி தொகுதியில் உள்ள மெகமூர்கஞ்ச் பகுதியில் பாஜகவுக்கான ஊடக மையம் மற்றும் பிரதமர் மோடிக்கான தேர்தல் அலுவலகம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் அமித் ஷா கூறியதாவது:

நடந்து முடிந்த 3 கட்ட வாக்குப்பதிவினை காணும்போது, பாஜக மீண்டும் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என நம்புகிறேன். உத்தரபிரதேசத்தில் பகுஜன் - சமாஜ்வாடி கூட்டணியை விடவும், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். கடந்த 2014ம் ஆண்டு நடந்த தேர்தலில் இருந்த பாஜகவின் கணிப்பை விட தற்போது மிக தெளிவாக உள்ளது.



வாரணாசி தொகுதியில் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளராக பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடவுள்ளார் என ஏற்கனவே அறிவித்திருந்தோம். வரும் 25ம் தேதி மாபெரும் ரோட்ஷோ நடைபெறும். அதன் பின்னர் பிரதமர் மோடி 26ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வார். வேட்புமனு தாக்கல் செய்யும் போது பீகார் முதல்வர் நிதீஷ் குமார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் உடனிருப்பார்கள்.

மேலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  ‘இந்து பயங்கரவாதி’,  ‘பகவா பயங்கரவாதி’ என பேசியுள்ளார். நிச்சயம் அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். ஒரு இந்து பயங்கரவாதியாக இருக்க முடியாது. இந்து மதத்தின் கலாச்சாரம் யாரையும் காயப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டதல்ல.

இவ்வாறு அவர் கூறினார். #AmitSha #BJP 
 
Tags:    

Similar News