செய்திகள்

பயங்கரவாதிகளை ஒழித்த பிறகே ஓய்வு எடுப்பேன் - பிரதமர் மோடி

Published On 2019-04-09 10:22 GMT   |   Update On 2019-04-09 10:22 GMT
பயங்கரவாதிகளை ஒழித்த பிறகே ஓய்வு எடுப்பேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார். #PMModi #LoksabhaElections2019

மும்பை:

மராட்டிய மாநிலம் லத்தூரில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் இன்று நடந்தது. அதில் பிரதமர் நரேந்திர மோடியும், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேயும் கலந்து கொண்டனர்.

அதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-

காங்கிரசும் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் தேச விரோத எண்ணங்கள் மற்றும் செயல்பாட்டுடன் இருக்கின்றனர். சுதந்திரத்திற்கு முன்பு காங்கிரஸ் தலைவர்கள் புத்திசாலித் தனமாக செயல்பட்டு இருந்தால் பாகிஸ்தான் உருவாகி இருக்காது.

தற்போது காங்கிரசின் தேர்தல் அறிக்கை பாகிஸ்தான் குரலாக ஒலிக்கிறது. காங்கிரசின் கூட்டணி கட்சியான தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஒமர் அப்துல்லா காஷ்மீருக்கு தனி பிரதமர், தனி ஜனாதிபதி வேண்டும் என்று பேசுகிறார்.


இதில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணியான தேசியவாத காங்கிரசின் நிலை என்ன? காஷ்மீருக்கு தனி பிரதமர் வேண்டும் என காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ள மராட்டியத்தின் பலம் வாய்ந்த மனிதர் சரத்பவார் ஆதரிக்கிறாரா?

அதே நேரத்தில் புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற கொள்கையில் பா.ஜனதா உள்ளது. பயங்கரவாதிகளின் மறை விடங்களில் புகுந்து அவர்கள் மற்ற நாடுகளில் இருந்தால் கூட அழிக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

புல்வாமா தாக்குதலில் நமது ராணுவ வீரர்களின் வீரம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. காங்கிரசும், பாகிஸ்தானும் நமது வீரர்கள் பலத்துடன் இருக்கக் கூடாது. பயங்கரவாதம் பரவ வேண்டும் என விரும்புகின்றனர். என்னைப் பொறுத்தவரை பயங்கரவாதத்தையும், பயங்கரவாதிகளையும் வீழ்த்திய பிறகே ஓய்வெடுப்பேன்.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட அனைவரின் நலனில் அக்கறையுடன் பா.ஜனதா தேர்தல் அறிக்கை உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் நான் உங்களது (மக்களது) நம்பிக்கையை பெற்று இருக்கிறேன். தேர்தல் அறிக்கையில் புல்வாமா தாக்குதல் குறித்து எதுவும் கூறவில்லை.

பாகிஸ்தான் மீது யார் விமான தாக்குதல் நடத்தினார்களோ அவர்களுக்கு முதல் முறையாக வாக்களிப்பவர்கள் தங்கள் ஓட்டுகளை அர்ப்பணியுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார். #PMModi #LoksabhaElections2019

Tags:    

Similar News