செய்திகள்

ஷீலா தீட்சித் சரியாக ஆட்சி செய்திருந்தால் ஆம் ஆத்மி கட்சியை தொடங்கியிருக்க மாட்டேன் - அரவிந்த் கெஜ்ரிவால்

Published On 2019-03-27 05:06 GMT   |   Update On 2019-03-27 05:06 GMT
பாராளுமன்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அரவிந்த் கெஜ்ரிவால் ஷீலா தீட்சித் சரியாக ஆட்சி செய்திருந்தால் ஆம் ஆத்மி கட்சியை தொடங்கியிருக்க மாட்டேன் என கூறியுள்ளார். #AAP #ArvindKejriwal #SheilaDikshit #PMModi
புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் அனைத்து கட்சி தலைவர்களும் பொதுக்கூட்டங்கள், பிரச்சாரம், செய்தியாளர் சந்திப்பு என தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லியின் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தீவிரமான களப்பணியில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால்  கலந்துக் கொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

தற்போதுள்ள மோடி அரசு எப்படி நாட்டை மோசமாக வழி நடத்துகிறதோ, அதேபோல் தான் காங்கிரஸைச் சேர்ந்த டெல்லியின் முன்னாள் முதல் மந்திரி ஷீலா தீட்சித்தும் ஆட்சி நடத்தினார் என பலர் கூறியுள்ளனர். அவர் நல்ல முறையில் ஆட்சி செய்திருந்தால் ஆம் ஆத்மியை நான் தொடங்க வேண்டிய அவசியமே இல்லை. டெல்லியில் பள்ளிகள் முதல் மருத்துவமனைகள் வரை எதுவுமே அவரது ஆட்சியில் சரிவர செயல்படவில்லை. 



அவரைத் தொடர்ந்து வந்த மோடி அரசும் மக்களை ஏமாற்றுகிறது. டெல்லியில் புதிய பள்ளிகள், மருத்துவமனைகள், மொகலா கிளினிக் ஆகியவற்றை அமைக்க எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் மக்களுக்கான  எங்கள் பணியை மோடி அரசால் தடுக்க இயலாது. டெல்லியில் மேலும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கவும் அனுமதி வழங்கவில்லை.

அனைத்து நலப்பணிகளுக்கும் மத்திய அரசின் அனுமதி தேவைப்படுகிறது. எல்லா மாநிலங்களுக்கும் திட்டங்களை நிறைவேற்ற சுதந்திரம் உள்ளது. ஆனால் டெல்லிக்கு இல்லை. மத்திய அரசின் செயல்களில் அதிருப்தி ஏற்பட்டிருப்பவர்கள் மீண்டும் அவர்களுக்கு ஓட்டுப்போடாதீர்கள். மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் அடுத்த 5 ஆண்டுகளுக்கும் இதே நிலை நீடிக்கும்.

இவ்வாறு அவர் பேசினார். #AAP #ArvindKejriwal #SheilaDikshit #PMModi 
Tags:    

Similar News