செய்திகள்

போயிங் 737 மேக்ஸ் 8 விமானங்கள் தரையிறக்கம்- மத்திய விமான போக்குவரத்து துறை இன்று அவசர ஆலோசனை

Published On 2019-03-13 05:06 GMT   |   Update On 2019-03-13 06:34 GMT
போயிங் 737 மேக்ஸ் 8 விமானங்கள் அனைத்தும் இன்று மாலை 4 மணியளவில் தரையிறக்கப்படும் என சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. #Boeing737MAX8 #EthiopiaPlaneCrash #DGCA
புதுடெல்லி:

எத்தியோப்பியாவில் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானதில் இந்தியர்கள் உள்பட 157 பேர் உயிரிழந்தனர். இதே ரக விமானம் இந்தோனேசியாவில் கடந்த அக்டோபரில் விபத்துக்குள்ளானதில் 189 பேர் பலியாகினர்.
 
இதனால், ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், சீனா, எத்தியோப்பியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் அந்த ரக விமானங்களை இயக்க தற்காலிக தடை விதித்துள்ளன.



இந்தியாவிலும் நேற்று போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமான சேவை நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் நடந்த ஆலோசனையின்போது, போயிங் 737 மேக்ஸ்-8 விமானங்களை தரையிறக்க சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) முடிவு செய்திருப்பதாக விமான போக்குவரத்து துறை டுவிட்டர் மூலம் நேற்று இரவு தகவல் வெளியிட்டது.

“பாதுகாப்பான செயல்பாடுகளை உறுதி செய்யும் வகையில், தேவையான மாற்றங்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்வரை விமானங்கள் நிறுத்திவைக்கப்படும். பயணிகளின் பாதுகாப்பே நமது முதல் முன்னுரிமை. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உலகம் முழுவதிலும் உள்ள விமான நிறுவனங்கள், விமான உற்பத்தியாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்” என்று அந்த டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று மாலை 4 மணியளவில் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் அனைத்தும் தரையிறக்கப்படும் என சிவில் விமான போக்குவரத்து இயக்குநரக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

அதேசமயம் விமான நிறுவனங்களின் அதிகாரிகளுடன் இந்திய விமான போக்குவரத்து துறை செயலாளர் ஆலோசனை நடத்த உள்ளார். இதற்காக அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். #Boeing737MAX8 #EthiopiaPlaneCrash #DGCA
 
Tags:    

Similar News