செய்திகள்

தேசபக்தி என்பது எந்த கட்சியின் ஏகபோக உரிமையும் அல்ல - சிவசேனா காட்டம்

Published On 2019-03-11 09:51 GMT   |   Update On 2019-03-11 09:51 GMT
பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் தொடர்பாக கேள்வி எழுப்புபவர்களுக்கு பதில் அளித்த சிவசேனா, தேசபக்தி என்பது எந்த கட்சியின் ஏகபோக உரிமையும் அல்ல என குறிப்பிட்டுள்ளது. #Patriotism #Patriotismmonopoly #ShivSena
மும்பை:

பாகிஸ்தான் எல்லைப்பகுதிக்குள் புகுந்து இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் அங்கிருந்த பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர்? என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் மத்திய அரசின் சார்பில் வெளியிடப்படவில்லை.

இதுதொடர்பாக மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதற்கிடையில், டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி சமீபத்தில் பேரணி ஒன்றில் ராணுவத்தினர் அணியும் சீருடையுடன் கலந்து கொண்டார். இதை குறிவைத்து எதிர்க்கட்சிகள் மத்தியில் ஆளும் பாஜக மீது குற்றம்சாட்டி வருகின்றன. ராணுவ வீரர்களின் தியாகத்துக்கு பாஜகவினர் உரிமை கொண்டாடி வருவதாக எதிர்ப்புக்குரல் கிளம்பியுள்ளது.

இந்நிலையில்,  தேசபக்தி என்பது எந்த கட்சியின் ஏகபோக உரிமையும் அல்ல என சிவசேனா கட்சி குறிப்பிட்டுள்ளது. அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘சாமனா’வில் இவ்விவகாரம் தொடர்பாக இன்று ஒரு தலையங்க கட்டுரை வெளியாகியுள்ளது.

விமானப்படையினர் நடத்திய தாக்குதல் என்பது அவர்களின் பணியின் ஒரு பகுதியாகும். யாரும் இட்ட வேலையை செய்வதற்காக அந்த தாக்குதல் நடத்தப்படவில்லை. இந்த தாக்குதலால் ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பான தலைகணக்கு கேட்பவர்களும், தாக்குதலுக்கு உரிமை கோரும் வகையில் ராணுவ சீருடையில் ஊர்வலமாக செல்பவர்களும் சரிசமமாக கண்டிக்கப்பட வேண்டியவர்கள் ஆவார்கள்.

இதுதொடர்பாக கேள்வி எழுப்புபவர்கள் அரசியல் எதிரிகள் என்பதால் அவர்களின் கருத்துரிமையை தேசத்துரோகம் என்று யாரும் கூற முடியாது.

புல்வாமா தாக்குதலில் இருந்து நமது வீரர்களின் உயிர்களை பாதுகாக்க நாம் அடிப்படையில் தவறி விட்டோம். ஆனால், பல மாதங்கள் சிரமப்பட்டு, பயிற்சி பெற்ற பின்னர் ராணுவ வீரர்கள் அணியும் சீருடையில் சிலர் அரசியல் ஊர்வலம் நடத்துகின்றனர்.



தேர்தல் கமிஷனே நேரடியாக தலையிட்டு இதுபோல் செய்ய கூடாது என எச்சரிக்கும் நிலை இதனால் ஏற்பட்டுள்ளது. தேசபக்தி என்பது எந்த ஒரு அரசியல் கட்சியின் தனிப்பட்ட ஏகபோக உரிமையும் அல்ல என்பதை அவர்கள் உணர வேண்டும்’ என அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #Patriotism #Patriotismmonopoly #ShivSena
Tags:    

Similar News