ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த ராகுல்காந்தி ஒப்புதல்
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்று இணைக்கும் பணியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது.
மாநில அரசியலில் காங்கிரசுக்கு எதிராக செயல்படும் கட்சிகளை மெகா கூட்டணியில் ஒன்று இணைப்பதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது. இது தொடர்பாக 2 முறை எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்று திரண்டு ஆலோசனை நடத்தினார்கள்.
டெல்லியில் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த கட்சி பா.ஜனதா, காங்கிரசுக்கு எதிராக அங்கு செயல்பட்டு வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த காங்கிரசுடன் கூட்டணி அமைக்க கெஜ்ரிவால் விருப்பம் தெரிவித்தார்.
ஆனால் காங்கிரஸ் கட்சிதான் கூட்டணிக்காக ஆர்வமில்லாமல் இருந்தது. கெஜ்ரிவால் இதை வெளிப்படையாக தெரிவித்தார்.
இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளது. இதற்காக அந்த கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஒப்புதல் அளித்து உள்ளார்.
இது தொடர்பாக டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் கூறும்போது “ஆம் ஆத்மியுடன் நாங்கள் நல்ல நிலையில் உள்ளோம். பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு ஆம் ஆத்மியுடன் கூட்டணி இறுதி முடிவாகும்” என்றார்.
டெல்லியில் மொத்தம் 7 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளது. #RahulGandhi #parliamentelection #kejriwal