செய்திகள்

மகாராஷ்டிரா பட்ஜெட் கூட்டம்- ஆளுநரின் உரையை புறக்கணித்த எதிர்க்கட்சிகள்

Published On 2019-02-25 15:26 IST   |   Update On 2019-02-25 15:26:00 IST
மகாராஷ்டிர மாநில சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளில் ஆளுநரின் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. #MahaBudgetSession #MaharashtraAssembly
மும்பை:

மகாராஷ்டிர மாநில சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், சட்டமன்ற கூட்டு அமர்வில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் உரையாற்றினார். ஆனால் ஆளுநர் உரையை தொடங்குவதற்கு முன்பே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் புறக்கணித்து விட்டு வெளியேறினர்.

ஆளுநர் உரையை புறக்கணித்தது குறித்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் தனஞ்செய் முண்டே கூறுகையில், ‘ஆளுநர் பதவி என்பது அரசியலமைப்புக்கு உட்பட்ட பதவி. ஆனால், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு ஆதரவாக ஆளுநர் பேசியதால் சட்டமன்றத்தில் அவர் ஆற்றும் உரையானது மாநில நலனுக்கான உரையாக இருக்குமா? அல்லது ஆர்எஸ்எஸ் நலனுக்கான உரையாக இருக்குமா? என்ற சந்தேகம் எழுந்தது. அதனால் அவரது உரையை புறக்கணிக்க முடிவு செய்தோம்’ என்றார்.

நாக்பூரில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், ஆஎஸ்எஸ் அமைப்பானது சிறந்த மதச்சார்பற்ற அமைப்பு என்றும் தனிநபரின் நம்பிக்கைகளுக்கு எப்போதும் மதிப்பு அளிக்கும் அமைப்பு என்றும் பாராட்டினார்.

இன்று காலை சட்டசபை கூடுவதற்கு முன்னதாக, ஆளுநரின் பேச்சைக் கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சில உறுப்பினர்கள், பாஜக தலைமையிலான மாநில அரசுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பினர். #MahaBudgetSession #MaharashtraAssembly
Tags:    

Similar News