செய்திகள்

அருணாச்சல பிரதேசத்தில் வன்முறைப் போராட்டத்தில் 2 பேர் பலி- கோரிக்கையை ஏற்றதாக முதல்வர் அறிவிப்பு

Published On 2019-02-25 06:52 GMT   |   Update On 2019-02-25 06:52 GMT
அருணாசல பிரதேசத்தில் குடியுரிமை சான்று வழங்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நிகழ்ந்த வன்முறைப் போராட்டத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில், கோரிக்கை ஏற்கப்பட்டுவிட்டதாக முதல்வர் அறிவித்துள்ளார். #ArunachalPradesh #ResidencyCertificate
இடாநகர்:

அருணாசல பிரதேசத்தின் நம்சாய், சாங்லாங் மாவட்டங்களில் பல ஆண்டுகளாக வசித்து வரும் 6 பிரிவினருக்கு நிரந்தர குடியுரிமை (பிஆர்சி) சான்று வழங்க, உயர்மட்டக்குழு ஒன்று அரசுக்கு பரிந்துரை செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் இடாநகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் போராட்டமும், வன்முறையும் பரவி வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் 60 வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டு, 150-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இந்த திட்டத்தை ஒத்திவைத்திருப்பதாக அரசு உறுதி அளித்தபோதும் போராட்டம் நீடித்தது.

நேற்று நித்தி விகாரில் உள்ள துணை முதல்-மந்திரி சவ்னா மெயினின் வீட்டை வன்முறையாளர்கள் தீ வைத்து எரித்தனர். மேலும் போலீஸ் துணை கமிஷனர் ஒருவரின் அலுவலகம் சூறையாடப்பட்டது. முதல்வரின் வீட்டை நோக்கி போராட்டக்காரர்கள் பேரணியாக சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்களை போலீசார் விரட்டியடித்தனர். துப்பாக்கி சூடும்நடத்தப்பட்டதாக தெரிகிறது. இதில், 2 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.



நிலைமை கட்டுக்கடங்காமல் போனதையடுத்து, இன்று அறிக்கை வெளியிட்டுள்ள முதல்வர் பீமா காண்டு, போராட்டக்காரர்களின் கோரிக்கையை அரசு ஏற்றுக் கொண்டதாகவும், சர்ச்சைக்குரிய நிரந்தர குடியுரிமை சான்று விவகாரம் முடிந்துவிட்டதாகவும் கூறினார். போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டு அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பிஆர்சி விவகாரத்தை அரசு எடுக்காது என தலைமைச் செயலாளர் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதாகவும் முதல்வர் கூறியுள்ளார்.

காங்கிரசின் ஆதரவுடன் இந்த போராட்டம் நடந்திருக்கலாம் என பாஜக குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. #ArunachalPradesh #ResidencyCertificate

Tags:    

Similar News