செய்திகள்

ரூ.10 லட்சம் திருடு போனதாக சட்டசபையில் கண்ணீர் விட்டு அழுத எம்.எல்.ஏ.

Published On 2019-02-18 19:25 GMT   |   Update On 2019-02-18 19:25 GMT
சட்டசபையில் பூஜ்ஜிய நேரத்தின் போது ரூ.10 லட்சம் திருடு போனது தொடர்பாக சமாஜ்வாடி எம்.எல்.ஏ. கல்ப்நாத் பஸ்வான் கண்ணீருடன் கோரிக்கை வைத்தார். #SamajwadiMLA #KalpnathPaswan
லக்னோ:

பொதுவாக தங்கள் தொகுதியை சேர்ந்த மக்களின் நலனுக்காக அந்தந்த தொகுதிகளின் பிரதிநிதிகள் அரசிடம் கோரிக்கை வைப்பதைதான் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகள் பார்த்து வருகின்றன. ஆனால் மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்க வேண்டிய எம்.எல்.ஏ. ஒருவரே, பெரும் நெருக்கடியில் சிக்கி தன்னை மீட்குமாறு கேட்டுக்கொண்ட சம்பவம் உத்தரபிரதேச சட்டசபையில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

அங்குள்ள அசாம்கார் மாவட்டத்தின் மேநகர் தொகுதியில் சமாஜ்வாடி சார்பில் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் கல்ப்நாத் பஸ்வான். இவர் நேற்று சட்டசபையில் பூஜ்ஜிய நேரத்தின் போது கண்ணீருடன் கோரிக்கை ஒன்றை வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-

என் வாழ்நாளில் ரூ.10 லட்சத்தை நான் கண்ணால் பார்த்தது இல்லை. ஆனால் நான் வீடு கட்டுவதற்காக வங்கியில் இருந்து ரூ.10 லட்சத்தை எடுத்துக்கொண்டு அசம்காரில் உள்ள ஓட்டலுக்கு சென்றேன். பின்னர் ஓட்டலில் இருந்து வெளியே வந்த போது பணம் வைத்திருந்த சூட்கேசில் பணம் இல்லை. அதை யாரோ திருடிச் சென்று இருக்கின்றனர்.

இது குறித்து எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தும் போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை. நான் ஒரு பரம ஏழை. அந்த பணம் திரும்ப கிடைக்கவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன். எனவே நான் உங்களை கைகூப்பி கேட்கிறேன். இங்கிருந்தும் நீதி கிடைக்கவில்லை என்றால் நான் எங்கே போவேன்?

இவ்வாறு பஸ்வான் கூறினார்.

எம்.எல்.ஏ. கண்ணீர் விட்டு அழுவதை பார்த்த சக உறுப்பினர்களும் வருத்தமடைந்தனர். அப்போது சட்டசபை விவகாரத்துறை மந்திரி சுரேஷ் குமார் கன்னா எழுந்து, எம்.எல்.ஏ. பஸ்வானை அமைதிப்படுத்தினார். இது தொடர்பாக விசாரணை நடத்த போலீசாருக்கு அறிவுறுத்தப்படும் எனக்கூறிய மந்திரி, அந்த பணத்தை விரைவில் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதிளித்தார்.

இதைத்தொடர்ந்தே கல்ப்நாத் எம்.எல்.ஏ. அமைதியானார்.
Tags:    

Similar News