செய்திகள்

ஆந்திராவில் விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்- சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

Published On 2019-02-14 05:04 GMT   |   Update On 2019-02-14 06:04 GMT
ஆந்திராவில் விவசாயிகளுக்கு மத்திய அரசு நிதியுடன் ரூ.4 ஆயிரம் சேர்த்து மொத்தம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். #ChandrababuNaidu #APFarmers #CentralGovt
விஜயவாடா:

மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்படும் என்று அறிவித்தது.

பிரதம மந்திரி கி‌ஷன் சமன்நிதி திட்டத்தின் கீழ் 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகள் நிதி உதவி பெற தகுதியானவர்கள் என்றும் தெரிவித்தது. தகுதி வாய்ந்த விவசாயிகளை கணக்கெடுத்து அனுப்பும் படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில் ஆந்திராவில் விவசாயிகளுக்கு மத்திய அரசு நிதியுடன் ரூ.4 ஆயிரம் சேர்த்து மொத்தம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். இந்த திட்டத்துக்கு ‘அன்னத்தா சுக்கிபவா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.


இந்த திட்டத்தின் கீழ் குத்தகை விவசாயிகள் உள்பட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த தொகை 2 தவணைகளாக தலா ரூ.5 ஆயிரம் வீதம் காரீப் மற்றும் ரபி பருவ காலத்தில் வழங்கப்படும். ஆந்திராவில் மொத்தம் 76 லட்சத்து 21 ஆயிரம் விவசாயிகள் உள்ளனர். இதில் மத்திய அரசு நிதி உதவி திட்டத்தின் கீழ் நிதி பெற 60 லட்சம் விவசாயிகள் தகுதி வாய்ந்தவர்கள். ஆனால் அனைத்து விவசாயிகளுக்கும் நிதி உதவி வழங்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.

இம்மாத கடைசி வாரத்தில் நிதி வழங்கப்படுகிறது. இத்திட்டத்துக்காக மாநில அரசுக்கு ரூ.2,370 கோடி செலவு ஏற்படும். இது குறித்து ஆந்திர வேளாண்மைத்துறை அமைச்சர் சந்திர மோகன் ரெட்டி கூறியதாவது:-

மத்திய அரசின் உதவித் தொகையை பெறும் தகுதியுள்ள விவசாயிகள் ஆந்திராவில் 60 லட்சம் பேர் உள்ளனர். இவர்களுடன் சேர்ந்து மேலும் 15 லட்சம் விவசாயிகளுக்கும் ஆந்திர அரசு நிதி உதவி அளிக்கப்படுகிறது.

தகுதியான விவசாயிகள் பட்டியலை இம்மாத இறுதிக்குள் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த பட்டியலை அளித்ததும் மத்திய அரசு ரூ.6000 உதவித் தொகையை வழங்கும். அந்த தொகையுடன் ஆந்திர அரசு சார்பில் ரூ. 4 ஆயிரம் சேர்ந்து வழங்கப்படும் என்றார். #ChandrababuNaidu #APFarmers #CentralGovt
Tags:    

Similar News