ஹாட் ஸ்பாட் 2 மச் – திரைவிமர்சனம்
ஹாட் ஸ்பாட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாவது பாகமாக ஹாட் ஸ்பாட் 2 மச் வெளியாகியுள்ளது. இந்த படத்திலும் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக், மூன்று வெவ்வேறு கதைகளை ஒரே படத்தில் இணைத்து சொல்ல முயற்சி செய்துள்ளார்.
பிரபல சினிமா நடிகர்களின் வெறித்தனமான ரசிகர்களின் உறவினர்களை கடத்திச் செல்லும் எம்.எஸ். பாஸ்கர், அவர்கள் உயிருடன் இருக்க வேண்டுமென்றால் சில நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்று மிரட்டுகிறார். அந்த நிபந்தனைகள் என்ன? உறவினர்கள் என்ன ஆனார்கள்? என்பதே முதல் கதை..
வெளிநாட்டில் படித்து வளர்ந்த தம்பி ராமையாவின் மகள் சஞ்சனா திவாரி, நாகரீகம் என்ற பெயரில் மிகவும் மாடர்னாக நடந்துக் கொள்கிறார். இதனால், தந்தை, மகள் பிரச்சனை ஏற்படுவது இரண்டாவது கதை.
2025-ம் ஆண்டில் வாழும் அஸ்வின் குமாருக்கு, 2050-ல் வாழும் பவானிஸ்ரீயுடன் காதல் உருவாகிறது. டைம் டிராவல் மூலம் அஸ்வின் குமாரை சந்திக்கும் பவானிஸ்ரீக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது. இது மூன்றாவது கதை.
நடிகர்கள்
மாஸ் ஹீரோக்களுக்கு தீவிர ரசிகர்களாக நடித்துள்ள ஆதித்யா பாஸ்கர், ரக்ஷன் கதாபாத்திரங்கள் இன்றைய இளம் தலைமுறைக்கு விழிப்புணர்வை தரும் வகையில் அமைந்துள்ளது. எம்.எஸ். பாஸ்கர் வழக்கம்போல் தனது நடிப்பால் கவனம் ஈர்த்து இருக்கிறார்.
நாகரீகம் என்ற பெயரில் ஆடை அணிவதில் தாராளம் காட்டும் சஞ்சனா திவாரி, கவர்ச்சி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறார். அதே நேரத்தில் தம்பி ராமையா பேசும் வசனங்கள், இன்றைய இளம் தலைமுறை பெண்களை நோக்கி கடுமையாக அமைந்துள்ளன.
அஸ்வின் குமார் – பவானிஸ்ரீ இணையும் காட்சிகள் கலகலப்பாக இருக்கின்றது. கதையைக் கேட்கும் தயாரிப்பாளராக பாலமணி மார்பன், அவரிடம் கதை சொல்ல வரும் பிரியா பவானி சங்கர் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. பிரிகிடா சகா அழகான தோற்றத்துடன் வந்து தனது நடிப்பால் கவனம் ஈர்க்குகிறார்.
இயக்கம்
ஹாட் ஸ்பாட் 2 மச் சுவாரஸ்யத்தில் பெரிய ஆச்சரியம் இல்லாவிட்டாலும், இளம் தலைமுறையினருக்கு ஏற்ற வகையில் காமெடியை கலந்து, ஒரு பொழுதுபோக்கு படமாக கொடுத்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக். முதல் கதை பெரியதாக ஈர்க்க வில்லை. இரண்டாம், மூன்றாம் கதைகளை ரசிக்க முடிகிறது.
இசை மற்றும் ஒளிப்பதிவு
சதீஷ் ரகுநாதனின் இசையும், ஜகதீஷ் ரவியின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்க்கிறது.
ரேட்டிங்- 3/5