செய்திகள்

கடைசி அலுவல் தினம் - மக்களவையில் உறுப்பினர்கள் பிரியா விடை

Published On 2019-02-13 19:57 GMT   |   Update On 2019-02-13 19:57 GMT
16-வது மக்களவையின் கடைசி அலுவல் தினமும் நேற்று என்பதால் உறுப்பினர்கள் அனைவரும் உணர்வுப்பூர்வமாக காணப்பட்டனர். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகள் கூறி பிரியா விடை பெற்றனர். #LokSabhaadjourns #RajyaSabhaadjourns
புதுடெல்லி:

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. 16-வது மக்களவையின் கடைசி அலுவல் தினமும் நேற்று என்பதால் உறுப்பினர்கள் அனைவரும் உணர்வுப்பூர்வமாக காணப்பட்டனர். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகள் கூறி பிரியா விடை பெற்றனர்.

இதையொட்டி கட்சி தலைவர்கள் உரையாற்றினர். இதில் சமாஜ்வாடி தலைவரும், உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதல்-மந்திரியுமான முலாயம் சிங் யாதவ் பேசும்போது, 16-வது மக்களவையில் இடம்பெற்றிருக்கும் அனைத்து உறுப்பினர்களும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என வாழ்த்தினார்.

மேலும் அனைவரையும் அரவணைத்து செல்லும் மோடியே மீண்டும் பிரதமராக வேண்டும் எனவும் மகிழ்ச்சியுடன் வாழ்த்து கூறினார். இதை பிரதமர் மோடி இருகரம் கூப்பி ஏற்றுக்கொண்டார். அப்போது பா.ஜனதா உறுப்பினர்கள் ஜெய் ஸ்ரீராம் எனக்கூறி கோஷமிட்டனர்.

இதைப்போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர் கருணாகரன் பேசும்போது, சபாநாயகர் சுமித்ரா மகாஜனை பாராட்டினார். கடந்த 5 ஆண்டுகளாக புன்சிரிப்புடன் சபையை நடத்தியதாக கூறிய அவர், சில நேரங்களில் கோபப்பட்டாலும் தனது சிரிப்பை வெளிக்காட்ட தவறவில்லை எனவும் தெரிவித்தார்.

தெலுங்குதேசம் கட்சி தலைவர் ஜிதேந்தர் ரெட்டி தனது உரையில், பா.ஜனதாவை விமர்சித்தார். ‘உங்கள் (பா.ஜனதா) ஆட்சியின் தொடக்கத்தில் உங்கள் நண்பன் யார்? எதிரி யார்? என்பதை நீங்கள் அறியவில்லை’ என்று தெரிவித்தார். கடந்த 2014-ம் ஆண்டு பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து இருந்த தெலுங்குதேசம், பின்னர் அந்த கூட்டணியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது. #LokSabhaadjourns  #RajyaSabhaadjourns
Tags:    

Similar News