செய்திகள்

பிஜு ஜனதா தளம் எம்பி மறைவுக்கு இரங்கல்- மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

Published On 2019-02-06 08:45 GMT   |   Update On 2019-02-06 08:45 GMT
பிஜு ஜனதா தளம் எம்பி லாடு கிஷோர் ஸ்வெயின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மக்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. #BudgetSession #Budget2019
புதுடெல்லி:

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அதன்பின்னர் அவை ஒத்திவைக்கப்பட்டது. மறுநாள் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. திங்கட்கிழமையில் இருந்து ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று காலை பாராளுமன்றம் கூடியது. அப்போது, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிஜு ஜனதா தளம் எம்பி லாடு கிஷோர் ஸ்வெயின் (வயது 71) மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இரங்கல் தீர்மானத்தை வாசித்தார். இதையடுத்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.



ஒடிசா மாநிலம் அஸ்கா தொகுதி எம்பியான லாடு கிஷோர் ஸ்வெயின், ஒடிசா சட்டசபை உறுப்பினராக 2004 முதல் 2009 வரை பணியாற்றினார். ஊரக வளர்ச்சி மற்றும் ஓபிசி விவகாரங்களுக்கான பாராளுமன்ற குழு உறுப்பினராகவும் பணியாற்றியவர்.

மக்களவையில் இன்று விவாதம் நடைபெறாததால், நாளை நடைபெற உள்ள கூட்டு கூட்டத்தில், ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது தொடர்ந்து விவாதம் நடைபெறும் என தெரிகிறது. விவாதத்திற்கு பிறகு பிரதமர் மோடி பதிலளித்து உரையாற்றுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  #BudgetSession #Budget2019
Tags:    

Similar News