செய்திகள்

புதிய சிபிஐ இயக்குனர் தேர்வு - முடிவெடுக்காமல் முடிந்த தேர்வுக்குழு கூட்டம்

Published On 2019-01-24 15:33 GMT   |   Update On 2019-01-24 15:33 GMT
புதிய சிபிஐ இயக்குனரை தேர்வு செய்ய டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த தேர்வுக்குழு கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். #CBIDirector #SelectionPanel
புதுடெல்லி: 

சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவுக்கும் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகள் கூறினர். இதையடுத்து இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவிட்டது. இடைக்கால சி.பி.ஐ. இயக்குனராக நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டார்.

இதை எதிர்த்து அலோக் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதில், மீண்டும் அவரை பணியில் தொடர அனுமதிக்க வேண்டும் என்று கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து, அலோக் வர்மா டெல்லி சி.பி.ஐ. தலைமை அலுவலகத்துக்கு வந்து மீண்டும் சி.பி.ஐ. இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதற்கிடையே, சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மா மீதான ஊழல் புகாரில் எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றிய ஆலோசனை டெல்லியில் பிரதமர் இல்லத்தில் நியமனக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதன் முடிவில், சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வர்மாவை நீக்க முடிவு செய்யப்பட்டது. அவரை தீயணைப்புத்துறை இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டார். ஆனால், புதிய பதவியை ஏற்க மறுத்த அலோக் வர்மா தனது பதவியை ராஜினாமா செய்தார்.  இடைக்கால சி.பி.ஐ. இயக்குனராக நாகேஷ்வர ராவ் மீண்டும் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், புதிய சிபிஐ இயக்குனரை நியமனம் செய்வது தொடர்பாக, டெல்லியில் பிரதமர் மோடியின் இல்லத்தில் இன்று இரவு தேர்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் தலைமை நீதிபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தகுதியுடைய அதிகாரிகள் பெயர்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனாலும், கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. மற்றொரு கூட்டம் விரைவில் நடைபெறலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். #CBIDirector #SelectionPanel
Tags:    

Similar News