செய்திகள்

மேற்கு வங்கத்தில் மோடியின் பிரச்சார பொதுக்கூட்ட தேதி மாற்றம்

Published On 2019-01-24 05:45 GMT   |   Update On 2019-01-24 05:45 GMT
மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடியின் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #ModiBengalrally #LSPolls
கொல்கத்தா:

பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மேற்கு வங்கத்தில் பாஜக தனது பிரச்சாரத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. மால்டாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா உரையாற்றினார். மாநிலத்தில் மொத்தமுள்ள 42 மக்களவை தொகுதிகளில் 23-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்திருப்பதாக அவர் கூறினார்.

இதேபோல் மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பிரச்சார பயணம் மேற்கொள்கிறார். அதில், ஜனவரி 28 ம் தேதி வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் தாக்கூர்நகர் பகுதியில் நடைபெற இருந்த பொதுக்கூட்டம், பிப்ரவரி 2-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படலாம் என தெரிகிறது.

இது குறித்து பாஜக தேசிய செயலாளர் ராகுல் சின்ஹா கூறுகையில்,  ‘பிரதமர் மோடி  ஜனவரி 28 ம் தேதி தாக்கூர்நகர் பகுதியில் பங்கேற்கவிருந்த பொதுக்கூட்டம் பிப்ரவரி 2ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பிப்ரவரி 2ம் தேதி அவர் துர்காபூரில் மற்றொரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளார். பிப்ரவரி 8 ம் தேதி சிலிகுரி பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார். இருப்பினும் இந்த தேதிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை’ என்றார்.

பாஜக தேசிய செயலாளர் ராகுல் சின்ஹா

இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக மோடியின் பொதுக்கூட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 8 ம் தேதி பிரிகேடியர் பரேட் மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என ஏற்கனவே கூறப்பட்டது. இது சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது. அவர் அடுத்த வாரம் தொடங்கி மாநிலத்தில் மூன்று பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்வதாக பாஜக தெரிவித்தது.

இதனையடுத்து ஜனவரி 28ல் தாக்கூர் நகரிலும், சிலிகுரியில் பிப்ரவரி 2 ம் தேதியும் மோடி உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டது.  பிப்ரவரி 8 ம் தேதி அசன்சாலில் மத்திய அமைச்சர் பாபுல் சப்ரியோவுடன் கலந்து கொள்வார் என்றும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த தேதிகளிலும் மாற்றம் செய்யப்படலாம் என நேற்று பாஜக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. #ModiBengalrally #LSPolls

Tags:    

Similar News