செய்திகள்

நொய்டாவில் கால்நடைகளை சாலையில் திரியவிட்டால் இனி 5000 ரூபாய் அபராதம்

Published On 2019-01-17 05:40 GMT   |   Update On 2019-01-17 05:40 GMT
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் கால்நடைகளை கட்டிப் போடாமல் சாலைகளில் திரியவிட்டால் இனி 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட உள்ளது. #NoidaAuthority
நொய்டா:

உத்தரபிரதேச மாநிலத்தின் நொய்டா நகரில், கால்நடைகளை அவற்றின் உரிமையாளர்கள், உரிய இடங்கள் மற்றும் கொட்டகைகளில் கட்டிப்போடாமல் சாலைகளில் அவிழ்த்து விடுவது அதிகரித்துள்ளது. இதனால் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே கால்நடைகளை சாலைகளில் அவிழ்த்துவிடும் உரிமையாளர்களுக்கு 2500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. எனினும் கால்நடைகள் சாலைகளில் திரிவது குறைந்தபாடில்லை. எனவே, அபராத தொகை இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நொய்டா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி வரும் காலங்களில், ரூ.5000 அபராதம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
"அனைத்து உரிமையாளர்களும் தங்கள் கால்நடைகளை தகுதியான இடங்களில் கட்டி வைத்துக்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறார்கள். விபத்துக்களுக்கு வழிவகுக்கும்  வகையில் சாலைகள் அல்லது பொது இடங்களில் கால்நடைகளை செல்ல அனுமதிக்கக் கூடாது. அவற்றை சரியான முறையில் கட்டி வைக்க தவறினால் அபராதத்துடன், உரிய தண்டனை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆறு மாதங்களில் சாலைகளில் திரிந்த 475-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பிடிக்கப்பட்டு, கோ சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதே காலகட்டத்தில், 75 கால்நடை உரிமையாளர்கள் உரிய அபராதம் செலுத்தி தங்கள் கால்நடைகளை பெற்று சென்றுள்ளனர்.

நொய்டாவில் ஏழு ஏக்கர் பரப்பளவில் கோ சாலை நிறுவப்பட்டு, தற்போது 1,325 கால்நடைகள் பராமரிப்பில் உள்ளன. #NoidaAuthority
 
Tags:    

Similar News