நாயகி ஸ்வேதா ஸ்ரீம்டன் திருமணமாகி கணவன், குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார். இவருக்கு விருப்பமில்லாத திருமணம் என்றாலும் கணவர் குழந்தை மீது அன்பாக இருந்து வருகிறார். ஸ்வேதாவுக்கு ஸ்மார்ட் போன் மீது ஆசை இருக்கிறது. திருமண நாளன்று கணவர், ஸ்வேதா ஸ்ரீம்டனுக்கு ஸ்மார்ட் போன் ஒன்றை பரிசாக கொடுக்கிறார்.
ஸ்மார்ட் போனில் சமூக வலைதளம் உபயோகிக்கும் ஸ்வேதா, நாளடைவில் அதற்கு அடிமையாகிறார். சமூக வலைதளத்தில் ஒருவருடன் நட்பாக பேச ஆரம்பிக்கும் ஸ்வேதா, கொஞ்ச நாளில் வாட்ஸ் அப் மூலம் அதிக நேரம் பேசிக்கொண்டே இருக்கிறார். கணவர் கண்டித்தும் நண்பருடன் பேசிக்கொண்டே இருக்கிறார். இதனால் வீட்டில் பிரச்சனை வருகிறது.
இறுதியில் ஸ்வேதா ஸ்ரீம்டன் வாழ்க்கை என்ன ஆனது? நண்பருடன் பேசுவதை நிறுத்தினாரா? என்பதை படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகியாக நடித்திருக்கும் ஸ்வேதா ஸ்ரீம்டன், இயல்பான நடிப்பின் மூலம் கவர்ந்து இருக்கிறார். பல காட்சிகளை அசால்டாக நடித்து கவனத்தை ஈர்த்து இருக்கிறார். நாயகனாக நடித்திருக்கும் குரு பிரகாஷ் எதார்த்தமாக நடித்திருக்கிறார். மனைவியின் செயலை கண்டு வருந்துவது, சந்தேகப்படுவது என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார்.
ரகசிய சினேகிதனாக நடித்திருக்கும் வேல்முருகன், கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். நாயகியின் அம்மாவாக நடித்திருக்கும் பத்மா, ரகசிய சினேகிதனின் மனைவியாக நடித்திருக்கும் நிஷா, நாயகனின் நண்பராக நடித்திருக்கும் பாக்யராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் கந்தவேலு ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
இயக்கம்
சமூக வலைத்தள மூலம் ஒரு குடும்பத்தில் வரும் பிரச்சினையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் சேகர் கன்னியப்பன். நாயகிக்கும் ரகசிய சினேகிதனுக்கு இடையே நடக்கும் உரையாடலை ஆபாசம் இல்லாமல் இருப்பது சிறப்பு. குறைந்த பட்ஜெட்டில் ஓரளவுக்கு ரசிக்கும் படியான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
இசை, ஒளிப்பதிவு
டாக்டர் சுரேஷ் மற்றும் எஸ்.சுப்பிரமண்யா ஆகியோர் பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். ஒளிப்பதிவாளர் ஷாம்ராஜ்க்கு அதிகம் வேலை இல்லை. வீட்டிற்குள்ளேயே அதிக காட்சிகளை படம் பிடித்திருக்கிறார்.