செய்திகள்

பா.ஜனதா ஆட்சியிலும் ஸ்பெக்ட்ரம் ஊழலா? - மத்திய மந்திரி விளக்கம்

Published On 2019-01-17 00:05 GMT   |   Update On 2019-01-17 00:05 GMT
பா.ஜனதா ஆட்சியிலும் ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து மத்திய மந்திரி விளக்கம் அளித்தார். #Spectrum #ManojSinha
புதுடெல்லி:

கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் அறிக்கையில் ஒரு தகவல் கூறப்பட்டு இருந்தது.

அதில், ‘முதலில் வந்தவர்களுக்கு முதலில் ஒதுக்கீடு’ என்ற கொள்கை அடிப்படையில், கடந்த 2015-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சியில், ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு நுண்ணலை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், இது, தொலைத்தொடர்பு துறை நியமித்த குழுவின் சிபாரிசுகளுக்கு முரணானது’ என்றும் கூறப்பட்டு இருந்தது.

இதனால், பா.ஜனதா ஆட்சியிலும் ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

தொலைத்தொடர்பு துறையின் தவறான ஒதுக்கீட்டால், மத்திய அரசுக்கு ரூ.560 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதுபற்றி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி கூறியது.

இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு மத்திய தொலைத்தொடர்பு துறை மந்திரி மனோஜ் சின்கா மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

‘முதலில் வந்தவர்களுக்கு முதலில் ஒதுக்கீடு’ என்ற கொள்கைப்படி ஒதுக்கீடு செய்யப்பட்ட ஸ்பெக்ட்ரம் உரிமங்களை கடந்த 2012-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. அந்த தீர்ப்பு, ஸ்பெக்ட்ரம் சம்பந்தப்பட்டது.

நுண்ணலை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கு அந்த தீர்ப்பு பொருந்தாது.

இதுவரை, நுண்ணலை ஸ்பெக்ட்ரம் உரிமங்கள், ஏலமுறையில் விற்கப்பட்டதே இல்லை. நிர்வாக வசதிப்படிதான் விற்கப்பட்டுள்ளன. அந்த ஒரு நிறுவனத்துக்கு மட்டுமின்றி, தகுதியான எல்லா நிறுவனங்களுக்கும் அந்த தீர்ப்புக்கு முன்பும், பிறகும் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமும் (டிராய்) இந்த சிபாரிசுகளையே செய்துள்ளது.

எனவே, எந்த ஊழலும் நடக்கவில்லை. இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது.

நுண்ணலை ஸ்பெக்ட்ரமை ஏலமுறையில் விற்பது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை, அதுபற்றி பரிசீலிக்கவும் இல்லை. ஸ்பெக்ட்ரமுக்கு பணம் செலுத்தும் கால அவகாசத்தை 16 ஆண்டுகளாக அதிகரித்ததால் நன்மையே ஏற்படும். இதனால், ரூ.74 ஆயிரத்து 446 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்.

இவ்வாறு மனோஜ் சின்கா கூறினார்.

Tags:    

Similar News