செய்திகள்
சபரிமலையில் சாமி தரிசனத்திற்கு காத்திருக்கும் பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.

கேரளாவில் போராட்டங்கள் நீடித்தாலும் சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரிப்பு

Published On 2019-01-09 07:22 GMT   |   Update On 2019-01-09 07:22 GMT
கேரளாவில் போராட்டங்கள் நீடித்தாலும் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை குறையவில்லை. மகரவிளக்கு பூஜைக்கான நாள் நெருங்க நெருங்க பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. #Sabarimala
திருவனந்தபுரம்:

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை முடிந்து மகரவிளக்கு திருவிழா நடந்து வருகிறது.

மகரவிளக்கு பூஜைக்காக கோவில் நடைதிறந்த பின்னர் கடந்த 2-ந்தேதி இளம்பெண்கள் இருவர் சன்னிதானம் சென்று ஐயப்பனை தரிசித்தனர்.

இளம்பெண்கள் தரிசனம் கோவில் ஆச்சாரத்திற்கு எதிரானது என்று கூறி பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த 3-ந்தேதி கேரளா முழுவதும் முழு அடைப்பும் நடந்தது.

கேரளாவில் முழு அடைப்பு போராட்டத்தை தொடர்ந்து இன்று வரை அங்கு பிரச்சினை ஓயவில்லை. வாகனங்களை தடுத்து நிறுத்துவது, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வீடுகள் மீது குண்டு வீசுவது என வன்முறை நீடிக்கிறது.

தொடர்ந்து அசம்பாவிதங்கள் நடந்துவந்தாலும் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை குறையவில்லை. மகரவிளக்கு பூஜைக்கான நாள் நெருங்க நெருங்க பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது.

சபரிமலையில் முழு அடைப்பு நாளான 3-ந்தேதி மட்டும் 57 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். அதற்கு அடுத்த நாள் 4-ந்தேதி 54 ஆயிரம் பேரும், 5-ந்தேதி 51 ஆயிரம் பேரும், 6-ந்தேதி 45 ஆயிரத்து 500 பேரும் தரிசனம் செய்திருந்தனர்.

கடந்த 7-ந்தேதி மதியம் வரை சாமி தரிசனம் செய்த பக்தர்கள் எண்ணிக்கை 57 ஆயிரத்தை தாண்டியது.

மகரவிளக்கு பூஜை வருகிற 14-ந்தேதி நடக்கிறது. இதற்கு இன்னும் 5 நாட்களே இருப்பதால் சபரிமலை வரும் பக்தர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கேற்ப அங்கு பாதுகாப்பு நடவடிக்கையும் பலப்படுத்தப்பட்டுள்ளது. கூடுதல் போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  #Sabarimala



Tags:    

Similar News