செய்திகள்

பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு - மாநிலங்களவையில் மசோதா நிறைவேறுமா?

Published On 2019-01-09 05:59 GMT   |   Update On 2019-01-09 05:59 GMT
பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு பத்து சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்று நிறைவேறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. #RajyaSabha #10pcquota
புதுடெல்லி:

நாட்டிலுள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பை சேர்ந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் நடைமுறையில் உள்ளது.

இவ்வகையில் ஒட்டுமொத்தமாக பல்வேறு பிரிவினருக்கான இட ஒதுக்கீடு 50 சதவீதமாக உள்ளது.
 
இதேபோல், முற்பட்ட வகுப்பினர்களிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் வாழும் மக்களுக்கு உயர்கல்வி, அரசு வேலைவாய்ப்பு ஆகியவற்றில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய மத்திய மந்திரிசபை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது.

இதுதொடர்பாக இயற்றப்பட்ட மசோதாவை பாராளுமன்ற மக்களவையில் மத்திய சமூக நலத்துறை மந்திரி தாவர் சந்த் கேலாட் நேற்று தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவை சட்டமாக்க, அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்பதால் அரசியலமைப்பு சாசன திருத்த மசோதாவாக இது தாக்கல் செய்யப்பட்டது.

நேற்று மாலை 6 மணியில் இருந்து இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. சுமார் 4 மணி நேரம் மேலாக நடைபெற்ற இந்த விவாதத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட சிலர் இரவு 10 மணியளவில் மக்களவைக்கு வருகை தந்தனர். இறுதியில், இந்த மசோதாவை வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டது.



இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவாக 323 வாக்குகளும், எதிர்ப்பு தெரிவித்து 3 வாக்குகளும் பதிவாகின. இதனால் இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பலத்த கரவொலிக்கு இடையே அறிவித்தார்.
   
இந்த மசோதாவை ஆதரித்து வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, இந்த புதிய சட்டத்தின் மூலம் சாதி ஏற்றத்தாழ்வுகளை கடந்த வகையில் ஒவ்வொரு ஏழையும் சமவாய்ப்புகளை பெற்று கண்ணியமான வாழ்க்கையை அடைய முடியும் என தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து, மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. இதற்காக நேற்றுடன் முடிவடைய இருந்த மாநிலங்களவை கூட்டம் இன்றுவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை மாநிலங்களவை கூடியதும் இந்த மசோதா மீதான விவாதம் நடைபெறும். தேவைப்பட்டால் வாக்கெடுப்பும் நடத்தப்படலாம்.

ஆனால், மாநிலங்களவையில் இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறுமா? அல்லது, ஏற்கனவே இங்கு முடங்கி கிடக்கும் முத்தலாக் உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களைப்போல் இதுவும் முடங்கி விடுமா? என்ற கேள்வி அரசியல் நோக்கர்களை ஆட்கொண்டுள்ளது.

244 உறுப்பினர்களை கொண்ட மாநிலங்களவையில் பா.ஜ.க.வின் பலம் 74 ஆக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சிக்கு 50 எம்.பி.க்களும் இதர கட்சிகளுக்கு 120 எம்.பி.க்களும் உள்ளனர்.

வழக்கம்போல் இந்த மசோதாவையும் காங்கிரஸ் மாநிலங்களவையில் எதிர்த்தால் பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் அக்கட்சி மக்களின் பகையை சம்பாதிக்க நேரிடும். இதனால், அவர்கள் வாயை மூடிக்கொண்டு இந்த மசோதாவை ஆதரித்தே தீர வேண்டும் என பா.ஜ.க. மனக்கணக்கு போடுகிறது.

அப்படி, ஒருவேளை காங்கிரஸ் இதை ஆதரித்தாலும் மற்ற சிறிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கும்போது மூன்றில் இரண்டு என்ற பெரும்பான்மை ஆதரவை பெறாவிட்டால் இந்த மசோதா வெற்றிபெறாது என்றும் கருதப்படுகிறது.

குறிப்பாக, தேர்தல் ஆதாயத்துக்காக மோடி அரசு இந்த மசோதாவை கொண்டு வந்துள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார். எனினும், இந்த மசோதாவை ஆதரிப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுபோல், வேறுசில மாநில கட்சிகளின் மனநிலையும் வெவ்வேறு விதமாக இருப்பதால் நீட்டிக்கப்பட்ட இன்றைய மாநிலங்களவை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்த திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. #RajyaSabha #10pcquota #economicallybackward
Tags:    

Similar News