செய்திகள்

சமாஜ்வாடி- பகுஜன்சமாஜ் கூட்டணியை உடைக்க பா.ஜ.க. சதி- அகிலேஷ்யாதவ் புகார்

Published On 2019-01-07 12:51 GMT   |   Update On 2019-01-07 12:51 GMT
சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ் கட்சிகள் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைத்துள்ளதால் அதை உடைக்கும் வகையில் சி.பி.ஐ. விசாரணையை மத்திய அரசு ஏவி விட்டுள்ளது என்று அகிலேஷ் யாதவ் புகார் தெரிவித்துள்ளார். #akhileshyadav #Samajwadi Bahujansamaji

லக்னோ:

உத்தரபிரதேசத்தில் 2012-ல் இருந்து 2017 வரை அகிலேஷ் யாதவ் முதல்-மந்திரியாக இருந்து வந்தார். அப்போது 2012-ல் இருந்து 2013 வரை சுரங்கத்துறை மந்திரி பொறுப்பையும் அவர் கூடுதலாக கவனித்து வந்தார். பின்னர் வேறு மந்திரி நியமிக்கப்பட்டார்.

இந்த காலக்கட்டத்தில் விதிமுறைகளை மீறி சுரங்கங்களை அனுமதித்து முறைகேடு செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் ஏற்கனவே சி.பி.ஐ. வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியது.

ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா, சமாஜ்வாடி எம்.எல்.சி. ரமேஷ்குமார் மிஸ்ரா உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில் சி.பி.ஐ. மீண்டும் விசாரணை தொடங்கி உள்ளது. கடந்த சனிக்கிழமை பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது.

அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது ஆட்சியில் சுரங்கத் துறை மந்திரியாக இருந்தவர் ஆகியோரிடம் விசாரணை நடத்தவும் சி.பி.ஐ. திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

இது சம்பந்தமாக அகிலேஷ் யாதவ் கூறியதாவது:-

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ் கட்சிகள் பாரதீய ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைத்துள்ளதால் அதை உடைக்கும் வகையில் சி.பி.ஐ. விசாரணையை மத்திய பாரதீய ஜனதா அரசு ஏவி விட்டுள்ளது.

பழைய வழக்கை மீண்டும் தோண்டி விசாரிக்கிறார்கள். இதன்மூலம் பாரதீய ஜனதா தனது உண்மையான முகத்தை காட்டுகிறது.

சி.பி.ஐ.யை தனது கைப்பாவையாக வைத்து கொண்டு பாரதீய ஜனதா இந்த நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது.

நாங்கள் கூட்டணி அமைத்து மக்களை சந்திக்க செல்கிறோம். எங்களை தடுத்து விடலாம் என்று பார்க்கிறார்கள். சி.பி.ஐ. என்ன செய்ய முடியுமோ? செய்யட்டும்.

அவர்கள் எங்களிடம் கேள்வி கேட்டால் நாங்கள் பதில் சொல்ல தயார். நாங்கள் சொல்லும் பதில் மட்டும் அல்ல, இந்த நாட்டின் மக்களும் பாரதீய ஜனதாவுக்கு பதில் சொல்ல தயாராக இருக்கிறார்கள்.

பாரதீய ஜனதா தனது உண்மை முகத்தை காட்டியதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு காலத்தில் காங்கிரஸ் இதை செய்தது. இப்போது பாரதீய ஜனதா செய்கிறது.

பாரதீய ஜனதாவின் இந்த செயலுக்கு எதிர் விளைவுகளை சந்தித்தே ஆக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #akhileshyadav #Samajwadi Bahujansamaji

Tags:    

Similar News