செய்திகள்

பெங்களூர் சிறையில் சசிகலாவுடன் நடிகை விஜயசாந்தி சந்திப்பு

Published On 2019-01-06 12:43 GMT   |   Update On 2019-01-06 12:43 GMT
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரை நடிகை விஜயசாந்தி சந்தித்து பேசினார். #vijayashanthi #sasikala

பெங்களூர்:

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் சசிகலா பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

அவரை துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் அடிக்கடி சந்தித்து ஆலோசனை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் நடிகையும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான விஜயசாந்தி சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து பேசினார்.

இதுகுறித்து சிறை வட்டார தரப்பில் கூறும்போது, நடிகை விஜயசாந்தி நேற்று முன்தினம் சசிகலாவிடமும் சிறைத்துறையிடமும் முன் அனுமதி பெற்று சசிகலாவை சந்தித்தார். இருவரும் சுமார் 1 மணி நேரம் தனிமையில் பேசி கொண்டிருந்தனர் என தெரிவித்தனர்.

இந்த சந்திப்பின் போது, தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தையும் சேர்க்க வேண்டும் என்று சசிகலாவிடம் கூறியதாக தகவல் வெளியானது.

இது குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோரின் மிக நெருங்கிய நண்பராக நடிகை விஜயசாந்தி இருந்து வந்தார். ஏற்கனவே பலமுறை சசிகலாவை சிறையில் சந்தித்து பேசி இருக்கிறார்.


நான் கடந்த வாரம் ஐதராபாத் சென்றிருந்தபோது சசிகலாவை சந்திக்க அனுமதி பெற்று தாருங்கள் என்று என்னிடம் கேட்டார். அதன்படி அவரை சந்திக்க அனுமதி பெற்று கொடுத்தேன். அவர் ஐதராபாத்தில் இருந்து வந்து சசிகலாவை சந்தித்து விட்டு சென்றார். இதில் அரசியல் எதுவும் இல்லை. வழக்கமான சந்திப்புதான். இந்த சந்திப்பு குறித்து எங்கள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கும் தெரியும். இந்த சந்திப்பை அரசியல் ஆக்க வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார். #vijayashanthi #sasikala

Tags:    

Similar News