செய்திகள்

மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து- 5 பேர் பலி

Published On 2018-12-28 09:04 IST   |   Update On 2018-12-28 09:04:00 IST
மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் முதியவர்கள் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். #MumbaiFire
மும்பை:

மும்பையின் புறநகரில் உள்ள செம்பூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பு வளாகத்தின் பி- பிரிவு அடுக்குமாடி கட்டிடத்தில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஒரு தளத்தில் பற்றிய தீ, சிறிது நேரத்தில் கொழுந்து விட்டு எரிந்து மற்ற தளங்களுக்கும் பரவியது.

தகவல் அறிந்ததும் 8 வாகனங்களில் விரைந்து வந்த தீ அணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதுஒருபுறமிருக்க மீட்பு பணியும் நடைபெற்றது. தீப்பிடித்த தளத்தில் இருந்து முதியவர்கள் உள்ளிட்ட சிலர் கடுமையான தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் 4 முதியவர்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.



நள்ளிரவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆனாலும் கடுமையான வெப்பம் நிலவியதால் தண்ணீர் பீய்ச்சியடித்து குளிர்விக்கும் பணிகள் நடைபெற்றன.

தீ அணைக்கும் பணியின் போது, தீ அணைப்பு வீரர் ஒருவரும் காயம் அடைந்தார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. தீ எரிந்து கொண்டிருக்கும் போது, குடியிருப்பில் இருந்த சிலிண்டர் ஒன்று வெடித்ததால், தீயின் உக்கிரம் அதிகரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #MumbaiFire
Tags:    

Similar News