செய்திகள்

பாராளுமன்றம் 6வது நாளாக முடங்கியது- மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

Published On 2018-12-19 06:26 GMT   |   Update On 2018-12-19 06:26 GMT
ரபேல் விவகாரம், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, மேகதாது விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்றம் 6-வது நாளாக முடங்கியது. #WinterSession #ParliamentStalled
புதுடெல்லி:

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 11ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தற்போதைய எம்பிக்கள் மற்றும் முன்னாள் எம்பிக்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது. 12ம் தேதி அவை நடவடிக்கைகள் தொடங்கி நடைபெறுகின்றன. ஆனால், ரபேல், சிபிஐ விவகாரம், பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் மாநிலம் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபடுவதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.



இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடியது. இன்றும் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள், கோரிக்கைகளை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், 6-வது நாளாக பாராளுமன்றம் முடங்கியது. உறுப்பினர்களின் அமளி காரணமாக மக்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையில் உறுப்பினர்கள் அமைதிகாக்கும்படி அவைத்தலைவர் தொடர்ந்து கேட்டுக்கொண்டார். ஆனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்றும், அவையின் மையப்பகுதிக்கு வந்தும் முழக்கமிட்டனர். இதனால் அவையில் கடும் கூச்சல் குழப்பம் நிலவியது. இதையடுத்து அவையை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் அறிவித்தார். #WinterSession #ParliamentStalled 
Tags:    

Similar News