செய்திகள்

சரண் அடைந்த மாவோயிஸ்டுகளுடன் ஹாக்கி போட்டியை கண்டுகளித்த ஒடிசா முதல்வர்

Published On 2018-12-14 03:07 GMT   |   Update On 2018-12-14 03:07 GMT
ஒடிசாவில் சரண் அடைந்த மாவோயிஸ்டுகளுடன் இணைந்து முதல்வர் நவீன் பட்நாயக் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியை கண்டுகளித்தார். #NaveenPatnaik #SurrenderedNaxals #HockeyWorldCup
புவனேஸ்வரம்:

ஒடிசாவில் வன்முறைச் செயல்களில் ஈடுபடும் மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை கைவிட்டு திருந்தி வாழ வேண்டும் என்று அரசு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்துள்ளது. அவ்வாறு திருந்தி வாழ முன்வரும் மாவோயிஸ்டுகளுக்கு தேவையான உதவிகளையும் புனர்வாழ்வு திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. அதன்படி பல்வேறு பகுதிகளில் மாவோயிஸ்டுகள் சரண் அடைந்து திருந்தி வாழ தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில், சரண் அடைந்த மாவோயிஸ்டுகளை சமூகத்தின் மையநீரோட்டத்தில் இணையச் செய்யும் முயற்சியாக, அவர்களுடன் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அமர்ந்து உலகக் கோப்பை ஹாக்கி போட்டியை கண்டுகளித்தார்.

ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நேற்று காலிறுதி ஆட்டம் நடைபெற்றபோது, சரண் அடைந்த 30 மாவோயிஸ்டுகளுடன் அமர்ந்து போட்டியை கண்டுகளித்தார். இவர்களில் 16 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சரண் அடைந்த மாவோயிஸ்டுகள் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியை பார்க்க விரும்புவதாக தெரிவித்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற மால்கங்கிரி போலீஸ் சூப்பிரெண்டு, இது தொடர்பாக அரசு உயர் அதிகாரிகளிடம் பேசி, முதல்வருடன் சேர்ந்து போட்டியை காண ஏற்பாடுகளை செய்திருந்தார்.



முதல்வருடன் அமர்ந்து போட்டியை கண்டுகளித்தவர்கள், இந்த வாய்ப்பை வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். மேலும், இது தங்களின் வாழ்நாளில் சிறந்த அனுபவம் என்றும், உண்மையில் தாங்கள் சமூக மையநீரோட்டத்தின் ஒரு அங்கமாக உணர்வதாகவும் கூறினர்.

இதுபற்றி முதல்வர் நவீன் பட்நாயக் கூறுகையில், ‘இந்த இளைஞர்கள் அனைவரும் மாவோயிச பாதையை கைவிட்டு மையநீரோட்டத்திற்கு திரும்பியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதேபோல் நிறைய பேர் திரும்பி வருவார்கள் என நம்புகிறேன்’ என்றார். #NaveenPatnaik #SurrenderedNaxals #HockeyWorldCup
Tags:    

Similar News