செய்திகள்

பாராளுமன்ற தேர்தல்- புனே தொகுதியில் மாதுரி தீட்சித்தை களம் இறக்க பாஜக முடிவு

Published On 2018-12-07 08:34 GMT   |   Update On 2018-12-07 08:34 GMT
பாராளுமன்ற தேர்தலில் மாதுரி தீட்சித்தை புனே தொகுதி வேட்பாளராக களம் இறக்க பாரதிய ஜனதா முடிவு செய்துள்ளது. #MadhuriDixit #BJP
மும்பை:

வருகிற 2019-ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க ஆளும் பா.ஜனதா கட்சி இப்போதே தயாராகி விட்டது.

முதல் கட்டமாக வேட்பாளர்களை தேர்வு செய்வதில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. தற்போதைய எம்.பி.க்கள் பலர் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கேட்டு வருகிறார்கள்.

இதனால் எம்.பி.க்களின் செயல்பாடுகள், தொகுதியில் அவர்களுக்கு உள்ள நற்பெயர் போன்றவை குறித்து கட்சி மேலிடம் புள்ளி விவரங்களை சேகரித்து வருகிறது. செயல்பாடு சரியில்லாத எம்.பி.க்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

இதில் மராட்டிய மாநிலம் புனே தொகுதியின் தற்போதைய பா.ஜனதா எம்.பி.யான அனில் ஷிரோலேயின் செயல்பாடு சரியில்லை என்றும், அவர் மீது தொகுதி மக்களிடையே அதிருப்தி நிலவுவதாகவும் கட்சி மேலிடத்துக்கு தெரிய வந்துள்ளது.

அவருக்கு மீண்டும் வாய்ப்பு அளித்தால் வெற்றி வாய்பை பா.ஜனதா இழந்து விடும், தகுதியான சக்தி வாய்ந்த வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்றும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து பிரபல நடிகை மாதுரி தீட்சித்தை புனே பாராளுமன்ற தொகுதியில் நிறுத்துவது பற்றி பா.ஜனதா வேட்பாளர் தேர்வு குழு ஆலோசித்து வருகிறது.

ஹேமமாலினிக்கு அடுத்தபடியாக இந்திப்பட உலகில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்தார். அவர் சினிமாவை விட்டு விலகினாலும் பொது நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். அவருக்கு ரசிகர்களிடையே இன்னும் மவுசு குறையவில்லை. அவரது நிகழ்ச்சிக்கு கூட்டம் கூடுகிறது.

மேலும் மராத்தி மொழி பேசும் நடிகை என்பதால் மராத்தி மக்களை கவரலாம் என்றும் பா.ஜனதா மேலிடத்துக்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதுரி தீட்சித் பா.ஜனதாவில் உறுப்பினராக உள்ளார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் மோடியை ஆதரித்து பிரசாரம் செய்தார். அவரது பிரசார கூட்டத்துக்கு கடுமையான கூட்டம் கூடியது.

எனவே மாதுரி தீட்சித்தை புனே தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக களம் இறக்க முடிவு செய்துள்ளது. சமீபத்தில் பா.ஜனதா தலைவர் அமித்ஷா மும்பையில் மாதுரி தீட்சித் வீட்டுக்கு சென்று அவரது குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளராக நிறுத்துவது குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. அதற்கு மாதுரி தீட்சித்தும் சம்மதித்து விட்டதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் பா.ஜனதா வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. #ParliamentElection
Tags:    

Similar News