செய்திகள்

என்னை கொன்று விடுவார்கள் - நாடு திரும்ப நிரவ்மோடி மறுப்பு

Published On 2018-12-01 23:41 GMT   |   Update On 2018-12-01 23:41 GMT
என்னை கொன்று விடுவார்கள் என்பதால் நாடு திரும்ப மாட்டேன் என்று வக்கீல் மூலம் கோர்ட்டில் வைர வியாபாரி நிரவ் மோடி தெரிவித்தார். #NiravModi #India #PNBFraud
மும்பை:

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு அதை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பியோடிய பிரபல மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி. அவர் எந்த நாட்டில் பதுங்கி உள்ளார் என்பது இதுவரை தெளிவாக தெரிய வரவில்லை.

அவர் மீது சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்துள்ளன. நிரவ் மோடி மீதான வழக்கு மும்பையில் உள்ள சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்ட கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த கோர்ட்டில் அமலாக்கத்துறை அண்மையில் ஒரு மனுவை தாக்கல் செய்தது.



அதில், தலைமறைவாக உள்ள நிரவ் மோடியை பொருளாதர குற்றவாளிகள் சட்டத்தின் கீழ், தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்த மனு மீது கோர்ட்டில் விசாரணை நேற்று நடந்தது.

அப்போது நிரவ் மோடி தரப்பில் ஆஜரான வக்கீல் விஜய் அகர்வால் கூறுகையில், தனது சொத்து விவரங்கள் குறித்த எந்த தகவலோ, புள்ளிவிவரமோ நிரவ் மோடியிடம் இல்லை என்றார்.

அதற்கு அமலாக்கத்துறை வக்கீல்கள், நிரவ் மோடியை விசாரணைக்கு வரும்படி இதுவரை ஏராளமான இ-மெயில்கள், சம்மன்கள் அனுப்பப்பட்டு உள்ளன. அதை அவரும் பெற்றுக் கொண்டு உள்ளார். ஆனால் எங்களுடைய விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவர் இந்தியா திரும்புவதற்கு விரும்பவில்லை என்றனர்.

அப்போது, நிரவ் மோடியின் வக்கீல், “எனது கட்சிக்காரரை ராவணனுடன் ஒப்பிடுகின்றனர். அவருடைய 50 அடி உயர உருவ பொம்மையை இந்தியாவில் எரித்துள்ளனர். நாடு திரும்பினால் அவரை கொன்று விடுவார்கள் என்பதற்கான ஆதாரங்களும் உள்ளன. எனவே பாதுகாப்பு காரணம் கருதி அவர் நாடு திரும்ப விரும்பவில்லை. அதேநேரம் தான் விசாரணைக்கு ஆஜராக முடியாதது பற்றி அமலாக்கத்துறை, சி.பி.ஐ.க்கு அவர் கடிதமும் எழுதி உள்ளார்” என்று வாதிட்டார்.

அதற்கு அமலாக்கத்துறை வக்கீல்கள், பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்தால் நிரவ் மோடி அதுபற்றி போலீசில் புகார் செய்திருக்கவேண்டும். ஆனால் அதைச் செய்யவில்லை என்று வாதிட்டனர்.  #NiravModi #India #PNBFraud 
Tags:    

Similar News