செய்திகள்

காஷ்மீரில் இன்று நடந்த ஆறாம் கட்ட பஞ்சாயத்து தேர்தலில் 76.9 சதவீதம் வாக்குப்பதிவு

Published On 2018-12-01 19:10 IST   |   Update On 2018-12-01 19:10:00 IST
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று நடைபெற்ற ஆறாம் கட்ட பஞ்சாயத்து தேர்தலில் 76.9 சதவீதம் வாக்குகள் பதிவாகின. #Kashmirpanchayatelection
ஜம்மு:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தற்போது தேர்தல் நடைபெற்று வருகிறது. முதலில் நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16 தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 

இதேபோல், பஞ்சாயத்து தேர்தல்கள்  கடந்த 17-ம் தேதி தொடங்கி 9 கட்டங்களாக  நடைபெறுகிறது. நவம்பர் 17, 20, 24, 27, 29 மற்றும் டிசம்பர் 1, 4, 8, 11 ஆகிய தேதிகளில் இந்த ஒன்பதுகட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து தனிநாடாக அறிவிக்க வேண்டும் என அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பிரிவினைவாத இயக்கத் தலைவர்கள் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களை புறக்கணிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தினர். எனினும், கடந்த மாதம் நடைபெற்ற நகராட்சி தேர்தல்களில் மக்கள் பெருமளவில் வாக்களித்திருந்தனர்.



இதற்கிடையே, முதல்கட்ட பஞ்சாயத்து தேர்தல் கடந்த 17-ம் தேதி நடந்து முடிந்தது.

இந்நிலையில், ஜம்மு பிராந்தியத்தில் 7 மாவட்டங்கள், காஷ்மீர் பிராந்தியத்தில் 7 மாவட்டங்கள் என மொத்தம் 14 மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று ஆறாம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி, பிற்பகல் 2 மணிக்கு நிறைவடைந்தது.

இன்றைய தேர்தலில் ஜம்மு பகுதியில் 84.6 சதவீதமும், காஷ்மீர் பகுதியில் 17.3 சதவீதமும், ஒட்டுமொத்தமாக 76.9 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளது. 

கடந்த 17-ம் தேதி நடந்த முதல்கட்ட தேர்தலில் 74.1 சதவீதம் வாக்குகளும், 20-ம் தேதி நடந்த இரண்டாம்கட்ட தேர்தலில் 71.1 சதவீதம் வாக்குகளும், 24ம் தேதி நடந்த மூன்றாவது கட்ட தேர்தலில் 75.2 சதவீதமும், நான்காவது கட்ட தேர்தலில் 73.1 சதவீதமும், ஐந்தாம் கட்ட தேர்தலில் 71.1 சதவீதமும் பதிவாகி இருந்தது நினைவிருக்கலாம்.

இன்று பதிவான வாக்குகள் ஒன்பதுகட்ட தேர்தலும் முடிந்த பின்னர் எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. #Kashmirpanchayatelection
Tags:    

Similar News